இன்று உன் பணி நிறைவு நாள்

துயரத் துளிகளின்
ஈரம் துடைப்பவன் தோழன்.....
இவன் என் தோழன்..!!!

விரக்தி விளிம்பில்
வயது நரம்புகள் துடித்தாடும்
பொழுதுகளின்
வலி வழிப்பவன் சோதரன் ..
இவன் என் சோதரன்..!!

அடங்கா அரேபியக் குதிரையின்
ஆற்றல் இவன்:
மடங்கா வான் பரப்பனைய
வள்ளல் இவன்..:
உதவிட விரல்களில்
கரம் நிரப்பியவன் இவன்..;
பதவிக்காக பல்லிளிக்காத
பவித்திரன் இவன் ...
இவன் என் தோழன்...சோதரன்..!!!!

தன் வியர்வைத் துளிகளை
இத்தரையில் தெளித்து
வெற்றி மலர்களை பூக்க வைத்தவன்
பலரோடு இணைந்து இப்பள்ளியின்
சாதனைகளுக்கு சான்றானவன் ..
பலர் போல் இங்கு இன்று
பணி நிறைவு பெறுகிறான்..
அன்றியும்
சிலர் போல பலர் நெஞ்சின்
பளிங்கு சிலையென பதிந்து
பலகாலம் வாழும் சஞ்சீவி இவன்...

தொல்லைகளின் எல்லை விரிப்பினும்
விரிந்து கிடந்த
தில்லையாடி வள்ளியம்மை எனும்
அரசுப் பள்ளியை
அசர வைத்தவன் -அசுர வேகத்தில் !!!

தானே பாடுப்பட்டவன்
'தானே' புயலின் போது-
எனவே தான் வானே வந்து வாழ்த்தியது -
வாரியார் விழாவின் பொழுது..!


வசை எவர் பாடினாலும்
அதை இசையாய் மாற்றுபவன்...
சினத் தீயின் சுவாலைப் பரப்பும்
ஊதுகுழல் நான்...
எவர் சினத்தையும் தனது
சிரிப்புச் சிமிழில்
பதுக்குபவன் இவன்..!!

என் திசையும் ஆனவன்
உணர்வும் ஆனவன்
உயிராய் உள்ளவன்
இவனன்றி அசைந்தவன் நானல்ல
இனி இவனின்றி இருப்பது எப்படி

இவன் என் தோழன் ...சோதரன்...
தொழுகிறேன் கரங்களால்...!!!

எழுதியவர் : அகன் (28-Aug-14, 3:50 pm)
பார்வை : 94

மேலே