சிறுகதை கிடைக்குமா வேலை கவிஞர் இரா இரவி
சிறுகதை !
கிடைக்குமா வேலை !
கவிஞர் இரா .இரவி !
கண்ணன் நேர்முகத்தேர்வுக்கு தயாரானான் .இன்று எப்படியும் இந்த வேலை நமக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆசையோடு பெரிய நிறுவனத்திற்கு சென்றான் . தன் வருகையைப் பதிவு செய்து விட்டு அழைப்பிற்காக காத்து இருந்தான் .
அலுவலக உதவியாளர் திரு .கண்ணன் உள்ளே செல்க என்றார். உள்ளே சென்றான் .நேர்முகம் காணும் உயர் அதிகாரிகள் அமர்ந்து இருந்தார்கள் .வணக்கம் சொன்னான் .அமரச் சொன்னார்கள். அமர்ந்தான் .பெயர் என்ன என்றனர் .கண்ணன் என்றான் .அப்பா பெயர் கேட்டார்கள் .இராமகிருஷ்ணன் என்றான் .முகவரி கேட்டார்கள் சொன்னான் .இவனது விண்ணப்பத்தை வைத்துக் கொண்டே கேள்விகள் கேட்டார்கள் .பொறுமையாக பதில் சொன்னான் .
உங்களுக்கு சிகரெட் மது போன்ற கெட்ட பழக்கங்கள் உண்டா?என்றனர்
இல்லை எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது என்றான். காரணம் என் அப்பா படிப்பை விட ஒழுக்கத்தை பெரிதாக மதித்தவர். கெட்டப் பழக்கத்தால் வரும் தீமைகளை எடுத்துக் கூறி உடல் நலம் குறித்த விழிப்புணர்வை விதைத்து என்னை வளர்த்தார்கள் . அதனால் எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை என்றான் கண்ணன்.
மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவி என்பதால் உங்கள் விண்ணப்பம் கிடைத்தவுடன் தனியார் உளவுத்துறை மூலம் உங்களைப் பற்றி விசாரிக்க சொன்னோம் .அவர்கள் தந்த அறிக்கையில் உங்களுக்கு சிகரெட் மது போன்ற கெட்ட பழக்கங்கள்உண்டு என்று தந்துள்ளனர் என்றார்கள் .
மிகவும் பொறுமையாக கோபம் இன்றி பேசினான் .உங்களுக்கு தவறான அறிக்கை தந்துள்ளனர் .உண்மையிலேயே எனக்கு எந்த கெட்ட பழக்கங்கள் இல்லை . இந்த வேலைக்காக பொய் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை .என் அப்பா பொய் பேசுவது கூடாது என்று சொல்லியே வளர்த்து உள்ளார் . என்றான் கண்ணன் .
நீங்கள் மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று நண்பர்களுடன் கும்மாளம் இட்டு வருவதாக அறிக்கை தந்துள்ளனர். உண்மையா ? என்றனர் .
இது பாதி உண்மை பாதி பொய். நான் மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வது உண்மை .ஆனால் நண்பர்களுடன் கும்மாளம் இட செல்லவில்லை .மதுரையில் புதூரில் என் நண்பர் திரு பழனியப்பன் அவர்கள் அவருக்கு பார்வை இல்லாவிட்டாலும் அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்தி வருகிறார் .அங்கு சென்று அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொள்வேன்.
பார்வையற்ற விடுதி மாணவர்கள் .என குரலை கேட்டவுடன் என் பெயரை சொல்லும் ஆற்றல் .பாடல் பாடும் திறன் ,இசையமைக்கும் ஆற்றல் ,பேசும் திறமை கண்டு வியந்து விடுவேன் . பார்வை இல்லாத இவர்கள் இவ்வளவு சாதிக்கும் போது நாமும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் பிறக்கும் .மனச்சோர்வை நீக்கி விடும். தன்னம்பிக்கை வளரும் என்னை புதிப்பித்துக் கொள்ள அங்கு செல்வது வழக்கம் என்றான் கண்ணன் .
உங்களுக்கு கவிதை எழுதும் பழக்கம் இருப்பதாக அறிந்தோம் .இந்த வேலை தருகிறோம் கவிதை எழுதுவதை விட்டு விடுங்கள் என்றால் விடுவீர்களா ? என்றனர் .
மன்னிக்கவும் எனக்குள் உள்ள கவிதை எழுதும் படைப்பாற்றலை என்னால் கைவிட இயலாது .ஆனால் அலுவலக நேரத்தில் கவிதை எழுத மாட்டேன் என்று உறுதி தர முடியும் .நான் இல்லத்தில் தனிமையில் தனி அறையில் கவிதை எழுதும் பழக்கத்தை என்னால் விட முடியாது என்றான் கண்ணன் .
இந்த வேலையை உங்களுக்கு இல்லை என்று நாங்கள் மறுத்தால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் .என்றனர் .கவலையோ வருத்தமோ அடைய மாட்டேன் .நம் ஆற்றலை பயன்படுத்த இந்த நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை .பரவாயில்லை என்று மனதை தேற்றிக் கொள்வேன் . வீட்டிற்குள் முடங்கி விட மாட்டேன் .வேறு நிறுவனத்திற்கு முயற்சியைத் தொடர்வேன் .
நியமன அதிகாரிகள் கண்ணன் இந்த வேலை உங்களுக்குதான் .இதோ பணி நியமன ஆணை என்றனர் .வேலை கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த கண்ணனுக்கு வியப்பு .
அதிகாரிகள் சொன்னார்கள் .தனியார் புலனாய்வு நிறுவனம் உங்களுக்கு உங்களுக்கு சிகரெட் மது போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லை என்றே அறிக்கை தந்தனர் .ஆனால் நாங்கள்தான் உங்களுக்கு கோபம் வருகிறதா என்பதை சோதிக்க இப்படி கேட்டோம் . கோபம் கொள்ளாமல் மிகவும் பொறுமையாக உண்மை பேசினீர்கள்.அப்பாவின் அன்பான வளர்ப்பு பற்றி சொல்லியதும் எங்களுக்கு பிடித்தது .இந்த பெரிய நிறுவனத்தில் உள்ள அனைத்து பணியாளர்களிடம் நீங்கள் கோபம் இன்றி பொறுமையாக பார்க்க வேண்டிய மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவி என்பதால் பொறுமையை சோதித்தோம் .
நீங்கள் மதுரைக்கு அகவிழி விடுதிக்கு செல்வதாகவே அறிக்கையில் எழுதி இருந்தனர் .இரண்டும் முறை பொறுமை சோதிக்க நண்பர்களுடன் கும்மாளம் எடை செல்கிறீர்களா என்று கேட்டோம் பொறுமையாக சொன்ன விளக்கம் நன்று .கவிதை எழுதும் பழக்கத்தை விட மாட்டேன் என்று உறுதியாக உண்மை சொன்ன விதம் பிடித்தது .
இந்தாங்க ஆணை நாளை காலை பணியில் சேருங்கள் என்றார்கள்
அப்பா வளர்த்த விதம்மும் , ஒழுக்கமும் தான் இந்த வேலையை வாங்கித் தந்தது .இந்த உயர் பதவி கிடைக்க காரணமாக இருந்த அப்பாவிற்கு மனதால் நன்றி சொல்லி விட்டு .தனது குழந்தைகளையும் படிப்பை விட ஒழுக்கமே மேல் என்று சொல்லி வளர்க்க என்று உறுதி எடுத்துக் கொண்டான் கண்ணன் .
குறிப்பு ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள்
' புத்தகம் போற்றுதும் 'நூல் மதிப்புரையில் கதை எழுதிட முயன்றிட அறிவுரை தந்தார்கள் .அதன் வழியில் எழுதிய சிறுகதை புதிய முயற்சி .
.