இரட்டைத் தாய்
மலர்ந்து மகிழ்கிறாள்
மரபணுவுக்குச் சொந்தக்காரி,
மறைந்து நின்று அழுகிறாள்
மசக்கைக்குச் சொந்தக்காரி !
உன் சுவாசம்தான் என் மூச்சு ...
உதிரம் கூட உனதே ...
உருத்தரித்த கருவரையும்
உனக்குள் இருக்க
விஞ்ஞானம் சொல்கிறது நான்
வேரொருத்திக்குச் சொந்தமாம் !
வாடகை என்ற பணப்பறிமாற்ற
வளையத்திற்குள் நீ பட்ட
வலிகளைச் சுருக்கிவிட முடியுமா ?
உதவி என்ற சொல் நீ சிந்திய
உதிரச் சொட்டுக்களை
உனக்கு மீட்டுத் தருமா ?
நீ சுமந்த நாட்களில் மட்டுமல்ல
நீண்ட என் வாழ்க்கை முழுதும்
நான் உன் சொந்தமே.
மருத்துவச் சோதனைகள்
இதற்குச் சான்று இல்லை !
மன உணர்வுகளுக்கு
மருத்துவம் இல்லை !
அணுக் கொடுத்தவள் கேட்டவுடன்
அள்ளிக் கொடுத்துவிட்டாயே...
அடிப் பாதகத்தி...
அமுதூட்ட மார்பை
அறுத்துக் கொடுப்பாயா ?