பசி தீர வழி
அஹங்காரப்பசி தணிக்க
ஆகுது சமையலிங்கே.
ஆசையீரங் கோர்த்த
எண்ண விறகிட்டு
மனவடுப்பிலாக்கும்
சொல்செயல் பதார்த்தமெலாம்
விருப்பாய்க் குழைந்திடுது.
வெறுப்பாய்க் கருகிடுது.
அதிருப்திப்புகை கக்கி
அடுப்புத்தீ அமிழ்கிறது.
என்ன சமைத்தாலும்
உண்ணும்படியில்லை.
இனியுஞ் சமையல்செய்ய
எள்ளளவும் ஈர்ப்பில்லை.
அநுபவச்சாம்பல் தின்று
பற்றின்மை நீர்குடித்து
பசிதீர வழிசெய்வேன்
இசைவாகக் கண்ணயர்வேன்.