விளையாட்டு

பிரத்தியேகமான
நமக்கே நமக்கான
அந்த
கள்ளன் போலீஸ் விளையாட்டில்
நான் உன்னைத் தேடி
கண்டுபிடிப்பேன்
நீ -
காணாமல் போவாய் ...
மலையென குவிந்து கிடந்த
ப்ரியங்களுக்குள்
நீ திரும்பவும்
காணாமல் போவாய்
மீண்டும்
உனைத் தேடித் திரிகையில்
திடீரென பிரசன்னமாவாய் !

உன் கூந்தலிலாடும்
கொடி முல்லைச் சரத்தினை
விலங்கென மாட்டியெனைச்
சிறை செய்து
உன் பார்வைக் கோபுரத்தினில்
அதற்கான
சாவிக் கொத்தினை
விழியோரத்தின்
மைகரை துளிஈரத்தில்
ஒளித்து வைத்து விட்டு
மீண்டும்
காணாமல் போவாய் !

எதிர்பாரா நொடிகளில்
ஏதாவதொன்று நிகழ்த்தி
மொத்தமாயென்னை
கொள்ளையடித்து
மீண்டும் மீண்டும்
அள்ளிச் சென்றென்னை
உனக்குள் விதைத்து விட்டு
ஆழமான ஆணிவேரென
அரவமின்றி ஒளிந்துகொள்வாய் !

மழைக் காலங்களில்
நம் இரவுகளில் மிதந்த
சொப்பனக் கப்பல்களை
எந்த முன்னறிவுப்புமின்றி
கடத்திச் சென்றுனது
தூவானச் சிறைச்சாலையில்
ஒளித்து வைத்திருந்தாய் -
சிறைக்கூட நெடுஞ் சுவரின்
குழல் விளக்குகளான
உனது விழிகளில்
கண்டு பிடித்தேன்
காணமல் போன கப்பல்களை
ஆனால் ....
மங்கள வாத்தியம் முழங்க
தோழியர் துணை சூழ
மணமாலையோடு
மணமேடையில்
நீ
காணமல் போன
அதன் பிறகு
உன்னை என்னால்
கண்டுபிடிக்கவே முடியவில்லை .

எழுதியவர் : பாலா (12-Sep-14, 10:03 pm)
Tanglish : vilaiyaattu
பார்வை : 88

மேலே