ஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 02 - சந்தோஷ்

ஓர் எழுத்தாளனின் கதை

தொடர்ச்சி : 02

---------------------------------------------------------------------


அவசர சிகிச்சை பிரிவில் தினகரன்....................

முகம் வீங்கி விழிகள் சிவந்திருக்கிறது. கால் பழத்திருக்கிறது. முட்டியில் கட்டு போடப்பட்டுள்ளது. இடது கை பெருவிரல் பிளந்திருக்கிறது. முதுகில் போலீஸ் லத்தியின் தடயங்கள். வாயில் சிவப்பு கறைகள். உடல் முழுவதும் இ.சி.ஜி ஒயர்கள், இரத்த துளிகள்.

” டேய் டேய் தினா... நான் சொல்லியும் கேட்காம போனீயா டா.. கவிதை கிவிதை லாம் உனக்கு வேண்டாம் டா... நீ நல்லா இருந்தா போதும் தினா... இப்படி உன்னை பார்க்கவா நான் உயிரோட இருக்கேன். கடவுளே....... கடவுளே...... ” தினகரனின் தந்தை பாசத்தின் மிகுதியில் கண்ணீர் விட்டு கதற.


“ அ.................. ........அப்பா ! கா ......கா ஆ .. கா.............வி காவி “ வழக்கத்திற்கு மாறாக அதிக உணர்ச்சியில் திக்கி திக்கி.. காவியா பெயரை உச்சரித்து நலம் விசாரிக்க முயலுகிறான் என்பதை புரிந்துக்கொண்டவராக .....


“ இங்க இங்கதான் தினா..அடுத்த ரூம்ல ட்ரீட்மெண்ட் ல இருக்கா...... ஒன்னும் ஆகியிருக்காது “ என்று ஆறுதல் சொல்லும்போதே மீண்டும் நர்ஸ் பதட்டத்துடன் ஓடிவந்து.. “ சார் அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் க்கு போன் பண்ணிடுங்க “

“ஏம்மா என்ன ஆச்சு.. .... ? “

" சாரி சார்..! அந்த பொண்ணு........ “

“ இரும்மா இரும்மா.. வெளியில போயி பேசலாம்” ஏதோ அதிர்ச்சி செய்தி நர்ஸ் சொல்லப்போகிறார் என்று உணர்ந்தவராக தினகரனின் தந்தை அவசர சிகிச்சை அறைக்கு வெளியே வருகிறார்.

“ என்னம்மா நீங்க.. ? உள்ள இருக்கிறவன் அடிப்பட்டு உடம்பும் மனசும் வீக்கா இருக்கான் அவனுக்கு முன்னாடியே ஷாக் சொல்லவர்றீங்களே.. நர்ஸா உங்களுக்கு ஏதும் புரிய வேண்டாமா ?” நர்ஸ் மீது கொஞ்சம் ஆத்திரப்படுகிறார்.

“ சாரி சார். மேட்டர் அவ்வளவு சீரியஸ், அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் க்கு கால் பண்ணுங்க. சீப் டாக்டர் கண்டிப்பா பேரண்ட்ஸ் கிட்ட பேசியே ஆகணும்ன்னு சொல்றார். “

” ஏன்.. என்னாச்சு. அந்த பொண்ணுக்கு.. ? நானே சீப் டாக்டர்கிட்ட பேசிடுறேன் மா. ”

“ சாரி சார் அவ பிழைப்பது கஷ்டம். இருந்தாலும் முயற்சி பண்ணலாம்ன்னு .. “

“ அட என்னமா... நீ.. முடியுமா, முடியாதா.. சொல்லுங்க. இல்லன்னா வேற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் ட்ரீட்மெண்ட் பண்ணக்கிறோம் “ தினகரன் தந்தைக்கு இனம்புரியா பயம் கோவம் எகிறுகிறது.

“சார் என்கிட்ட ஏன் கோவப்படுறீங்க.? முதல்ல அவங்க பேரண்ட்ஸ் க்கு கால் பண்ணுங்க.” நர்ஸ்

“ லுக் அவளும் என் பொண்ணுதான். சீப் டாக்டர் எங்க... “ என்று சொல்லியவாறே... முதன்மை மருத்துவரின் அறைக்கு வேகமாக கோவமாக செல்கிறார்.

அங்கு

“ டாக்டர் .. காவியா-க்கு என்ன பிரச்சினை. உயிர் இருக்கா ? இல்லையா .. அவ அ அ அவளுக்கு எதாவது ஆச்சுன்னு நானும் என் பையனும் உயிரோட இருக்கமாட்டோம் “ பக்குவத்தை இழந்து பதட்டமடைய ஆரம்பித்துவிட்டார் தினகரனின் தந்தை.

“ஹாலோ சார் ஏன் டென்ஷன் ஆகுறீங்க .நீங்க அந்த பையன்னோட அப்பாவா ? ப்ளீஸ் உக்காருங்க. நான் சொல்வதை கேளுங்க பர்ஸ்ட் “ பல பலரின் அதிர்ச்சி உணர்வுகளை கண்டு சலித்துப்போன மருத்துவர்... மிகவும் அமைதியாக அமைதிப்படுத்துகிறார் தினாவின் தந்தையை.

“ இல்ல முதல்ல சொல்லுங்க.. காவியா பிழைப்பாளா ? அவ பேரெண்ட்ஸ் க்கு நான் தான் பதில் சொல்லனும். “ என்று கத்தியவர்...

“ டாக்டர் அந்த பொண்ணை காப்பாத்திடுங்க.. பணம் வேணும்னாலும் வாங்க்கோங்க...இல்லன்னா சொல்லுங்க வேற பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறோம். அவ அவ என் மவனோட உயிர் டாக்டர் உயிர்..” உணர்ச்சிகளின் கலவையில் அவரின் உதடுகள் குற்ற உணர்ச்சியில் நடுங்குகிறது, அவரின் கண்கள் பயத்தை கொட்டுகிறது.

தினகரன் தந்தையின் உணர்ச்சி பிரவாகத்தை கண்டு சற்று உயர்த்தி பார்த்த முதன்மை மருத்துவர் “ பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு போனாலும் அங்கேயும் எம்.பி.பி.எஸ் போன்ற படிப்பு படிச்சவங்கதான் இருப்பாங்க சார். ஏன் இப்படி இருக்கீங்க ? கூல் “ என்று சொல்லியவாறே. அவரின் தோள் மீது சிநேகமாக கைப்போட்டு..” சார்.. இந்த சேர்ல உக்காருங்க. நான் சொல்வதை கேளுங்க. அப்புறம் அழுங்க. உங்களப்போல நானும் டென்ஷன் ஆனா அவ்வளவுதான் ஆபரேஷன் பண்ண முடியாம போயிடும்.. இந்தாங்க இந்த தண்ணியை குடிங்க “ அவரின் மேஜையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க. மடக்... மடக் ....என்று நீர் அருந்தி கொஞ்சம் சமாதானம் ஆன தினகரனின் தந்தையிடம்..மருத்துவர்.....

“ அவ பேரு காவியா இல்லையா. ம்ம் காவியாவிற்கு பின் தலையில பலமா அடிப்பட்டிருக்கு. இரத்தமும் நிறைய போயிடுச்சு. அதுனால சுவாசிக்க முடியாம ஹார்ட் பீட் டோட்டலா லோ லெவல்ல இருக்கு. இப்ப நாங்க செயற்கை சுவாசம் கொடுத்து, கொஞ்ச நேரத்திற்கு உயிர் போகாம இருக்க வச்சிருக்கிறோம். ஒகேங்களா..! ”

“ அய்யோ டாக்டர்.... காவியா பிழைக்கணும் டாக்டர். எனக்கு கடவுளே இப்போ நீங்கதான். “ தினாவின் தந்தை பேசுவதை பொருட்படுத்தாத மருத்துவர் குறுக்கிட்டு “ வெயிட் வெயிட் நான் சொல்லி முடிச்சிடுறேன். ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்........ இப்போ எங்களுக்கு ஒ நெகட்டிவ் இரத்தம் அதிக அளவு தேவைப்படுது. அவ தலையில ஆபிரேஷன் பண்ணனும். ஆக அந்த காவியாவின் பேரெண்ட்ஸ் கிட்ட இத நாங்க சொல்லியே ஆகணும். நீங்க அந்த பொண்ணுக்கு ப்ரெண்ட்லியா குடும்ப நண்பரா இருக்கலாம். பட் நாளைக்கு எதாவது ப்ராப்ளம் வந்தா.. ரெஸ்பான்ஸ் யாரு..?... உங்களுக்காக ஒன்னு அட்டெஜட் பண்ணிக்கிறேன். இந்தாங்க இந்த போன்ல அவ பேரெண்ட்ஸ் க்கு போன் பண்ணுங்க. பேசிட்டு என்கிட்ட கொடுங்க “

முதன்மை மருத்துவரின் அறையிலுள்ள தொலைப்பேசியிலிருந்து ஓர் அதிர்ச்சி தகவல், மின்காந்த அலையாக பரிமாற்றமடைந்து சேலத்தில் இருக்கும் ஓர் இல்லத்தில் ட்ரிங் ட்ரிங் ஒலியாக சோககீதம் வாசிக்கிறது.

“ ஹாலோ யாருங்க. “ காவியாவின் அம்மா

-------- ( மறுமுனையில் தினாவின் தந்தை)

“ ஆமாங்க... நாளைக்கு தான் வருவோம். ஏன் எதுக்கு கூப்பிடுறீங்க. காவியா எங்க. நீங்க ஏன் பேசிறீங்க “ ஒரு சராசரி தாய், பெண் பிள்ளைகள் மீது காட்டும் தற்காப்பு, பயம் கலந்த உணர்வை தன் குரலில் காட்ட..

மறுமுனையில் தினாவின் தந்தை “ நான் காவியா கூட படிக்கிற தினகரனின் அப்பா. கொஞ்சம் பொறுமையா பதட்டபடாம கேளுங்க. ஒன்னுமில்ல காவியாவுக்கு ................. ஒன்னுமில்லமா... அது வந்து ... வந்து “

“ என்ன ஆச்சு எம்பொண்ணுக்கு.................................. “ முழுசெய்தி அறியும்முன்னே காவியா அம்மாவின் கதறல் ஒலி காற்று மண்டலத்தை ரணகளப்படுத்தி கோவையிலிருக்கும் தினா தந்தையின் காதில் யுத்த மிரட்டல் செய்கிறது.

“ அம்மா.. தங்கச்சி... இல்லமா இத கேளுங்க.. இல்ல இல்ல அடிப்பட்டிருச்சு ... ஹங் ஹங் ஆபரேஷன் பண்ணனும்.. நீங்க சீக்கிரம் வாங்க.... சீக்கிரம்... ... இந்தாங்க டாக்டர் பேசுறார் “ தினா தந்தையின் குரலில் தந்தி அடிக்கும் வேகத்தை மிஞ்சும் அவசரம், பதட்டம். குற்றம் செய்துவிட்ட போல குற்ற உணர்ச்சி....

முதன்மை மருத்துவர்... தொலைப்பேசியில் மிகவும் அழுத்தமாக, நிதானமாக, மனோத்துவ ரீதியாக காவியாவிற்கு செய்யபோகும் அறுவைசிகிச்சை பற்றி சொல்லி , அதற்கு காவியா அம்மாவின் சம்மதத்தையும் பெற்று, விரைவாக கோவை வருமாறு அறிவுறுத்திவிட்டு, தொலைப்பேசி இணைப்பை துண்டித்த பின்பு “ சார் அவங்க ஒகேன்னு சொல்லிட்டாங்க .. ஆபரேஷன் வேலை ஆரம்பிக்கனும். " ஓ "நெகட்டிவ் பிளட் 10 யூனிட் வேணும்..பிளட் அவ்வளவு ஈசியா கிடைக்கல.. நாங்களும் ரெடிப்பண்றோம். பட் நீங்களும் இந்த பிளட் க்ரூப் இருக்கும்.....தெரிஞ்சவங்க, ப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் வரச்சொல்லி “ இரத்த தானம் “ செய்ய சொல்லுங்க . ரொம்ப முக்கியம், காவியாவின் உயிர் இந்த 10 யூனிட்ல தான் இருக்கு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
~~~~ இரத்தம்....................! இரத்த தானம்..............! நாம் கடவுள்.......! ~~~

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயிரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும்.
இப்படி செத்துத்தொலைந்து மீண்டும் மீண்டும் அதிக அளவில் உற்பத்தியாகி நம் உடலை இயக்கும் ஐந்து ,ஆறு லிட்டர் இரத்தத்தில் வெறும் 350 மி.லி இரத்தத்தை தானாமாக கொடுத்துத்தொலைக்க நம்மில் பலருக்கு அக்கறையே இருப்பதில்லை. தானமாக கொடுக்கும் 350 மி.லி இரத்தமும் பத்து இருபது நாட்களில் மீண்டும் நமக்கு உற்பத்தியாகிக்கொள்ளும் என்ற அடிப்படை அறிவுக்கூட நாகரீகம் , விஞ்ஞான யுகத்தில் படித்தமேதாவிகளாக திரியும் நமக்கு இருப்பதே இல்லை.

என்றாவது ஒரு நாள் நடுரோட்டில் உடல் கிழிந்து , மண்டை உடைந்து, மொத்த இரத்தமும் கருப்புச்சாலையில் சிவப்பு சாக்கடையாக வீணாக சிந்தி ,உயிருக்கு போராடும் போது எவனோ , எந்த ஜாதிக்காரனோ , எந்த மதக்காரனோ கொடுத்திட்ட 350 மிலி இரத்தம் மட்டுமே நம்மை காப்பாற்றும் .
ஆம் ! இரத்தம் கொடுத்த கடவுள்கள் நம் கண்ணுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை...! . நாமும் கடவுளாக அவதாரம் எடுக்கலாமே... அதிகமில்லை இன்று இரத்தம் கொடுத்தால் அடுத்த 35 நாட்களுக்குள் நீங்கள் யாரோ ஒருவருக்கு கடவுள். அடுத்தடுத்து ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் இரத்த தானம் கொடுத்திட்டால் இந்த உலகில் வாழம் பல மனிதர்களுக்கு நாம் கடவுள் ஆகிவிடலாம். வெறும் கால் லிட்டருக்கு கொஞ்சம் அதிக இரத்தம் தான் நமக்கு கடவுள் பட்டம் கொடுக்கும். கடவுள் பட்டம் வாங்க முயற்சிப்போமா ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படி இப்படி கடவுளாகும் வாய்ப்பை தவறவிட்ட புண்ணியவான் புண்ணியவதிகளால் இப்போது காவியாவின் உயிரைக்காக்க இரத்த பிச்சை எடுக்க வேண்டிய அவலம்.
ஓ க்ரூப் இரத்தவகைக்கு ஓ க்ரூப் இரத்தம் மட்டுமே வேண்டும். காவியாவின் இரத்தம் ஓ நெகட்டிவ்(ஆர் ஹெச் )

தினகரனின் சகமாணவர்களுக்கு காவியாவிற்கு இரத்தம் தேவை என்று செய்தி தெரியவருகிறது. மாணவச்சமுதாயம் முனைப்புடன் ,விழிப்புணர்ச்சியுடன் செயல்ப்பட்டால் மணித்துளிகளில் எதையும் , எந்த மாற்றத்தையும், எந்த செயலையும் செய்திட முடியும். செயல்பட்டார்கள் பி.எஸ்.ஜி கலை அறிவியியல் கல்லூரி மாணவர்களுடன் , கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்களும்.

அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் முகமது ஜாபர் , அகல கண்விரித்து முதன்முறையாக உணர்ச்சிவயப்பட்டார். யெஸ்............! 30 யூனிட் O நெகட்டிவ் இரத்தம் அவரிடம் தரப்பட்டுவிட்டது. ஆம் வெறும் 1 மணி நேரத்தில்............!

இந்த 30 யூனிட் இரத்த துளிகளில் எந்த இரத்தத்துளி காவியாவை மீண்டும் இயக்க ஆரம்பிக்கும் ?

=============பரபரப்பான இந்த சமயத்தில்... தன் கடமையை செய்ய ஆரம்பித்தது இந்திய இறையாண்மை சட்டம்.


தினகரன் , காவியா மற்றும் சில மாணவர்களின் கல்லூரி படிப்புக்கு ஆப்பு வைக்க காத்திருக்கிறது துரு்ப்பிடித்த, கிழட்டு இந்திய சட்டங்கள்..........!!!




(தொ.....ட...ரு...ம்)


-இரா.சந்தோஷ் குமார்
( " O " Positive )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (13-Sep-14, 4:03 am)
பார்வை : 332

மேலே