வரம்

ஞாபகங்களின் ஆளுமையில்
வந்து விழும் நினைவுகளில்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!

தொலைத் தூர புள்ளியாய்
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!

எப்போதோ பெய்தாலும்
தவறாமல் நெஞ்சு நிறைக்கும்
ஒரு வானம் பார்த்த மழையாய்
காதலை கொட்டி நிறைக்கிறது
ஆசையாய் நீ பரவவிட்டுச் சென்ற...
அடர்த்தியான அந்த கடைசிப் பார்வை....!

என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!

அழுந்த பெய்யாத மழைக்குப்
பின்னான மண்ணின் வாசம் போல
விரவிக்கிடக்கும் உணர்வுகள்
கண் சிமிட்டி சிரிக்கின்றன
எனக்குள் இருக்கும் உனக்கான
கம்பீரக் காதலைப் பார்த்து...!

ஒரு மரமும் அதன் நிழலும்
கொஞ்சலோடு பேசிச் சிரித்து
எனைக் கேலி செய்த பொழுதில்
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!

எப்படிப் பார்த்தாலும் ஒரு மனிதனுக்குள் இருக்கும் பச்சையம், அந்த உயிர்ப்புத் தன்மையின் மூல முடிச்சு காதல். காதல் இல்லை எனக்குள் என்று சொல்லும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம். காதல் என்ற வார்த்தையின் கற்பிதங்கள் பலவாறு மனித மூளைகளுக்குள் பதியப்பட்டு இருப்பதால் அறிவின் படி நிலைக்கேற்ப, ஏற்பட்ட அனுபவத்திற்கேற்ப ஒரு புரிதல் கிடைக்கும். காதல் சம்பந்தப்பட்ட ஒரு மிஸ்டிக் நினைவுகள் வருவது எப்போது என்று கொஞ்ச ஆராய்ந்து பார்த்தால்....

அது பெரும்பாலும் தனிமையில்தான் தனது ராஜாங்கத்தை நடத்துகிறது.....ஆமாம் தனிமை தவம் அல்ல....அது வரம்....!

எழுதியவர் : Dheva .S (22-Sep-14, 7:23 pm)
Tanglish : varam
பார்வை : 123

மேலே