பெண்களே ஜாக்கிரதை
பேருந்து நெரிசல்
சாராயம் கலந்த
ஆண்கள் வாடையின் ஆக்கிரமிப்பு;
மூச்சுவிட முடியாமல்
குடல்புரட்டும் அவதிகள் ;
ஒட்டிஉரசி
இடித்து
இம்சை செய்யும் ஈனத்தனம்!
இது
பெண்களுக்கேயான சாபக்கேடு...
%%%
வீதியோரங்களிலும்
சாலையோரங்களிலும்
திருட்டுத்தனமாக அங்கம் மேயும்
அறிவுகெட்ட மனித மிருகங்கள்;
அவர்களின் பார்வைக்கு அகப்படாமல்
ஒதுங்கியோடி
மானம் காக்கும்
அவலநிலையே தொடர்கதை...
%%%
மற்றொரு கூட்டம்
நயவஞ்சகமாய்ப் பேசி
கட்டிலில் வீழ்த்ததுடிக்கும்
குள்ளநரி கூட்டங்களாய்
அவதரித்து அலைகின்றன...
கடைசி நேரங்களிலாவது
இவர்களின் சுயரூபமறிந்து
தப்பித்தும் கொள்கிறார்கள்
பலப்பெண்கள் ...
இந்த மலஉண்ணிகள்
ஒருபுறமிருக்க
பள்ளியறை பாடம் நடத்த
பள்ளிகூட ஆசிரியனே
கேடுகெட்டு அலைகிறான்..!
அந்தோ பாவம்....
மலராத மொட்டுக்கள்
என்ன செய்யும்...?
பள்ளிகளில் மட்டுமல்ல
வீட்டிலும் சில நரவல் தின்னும் அப்பன்கள்
பெற்ற பிள்ளையையே
தங்கள் இச்சைக்கு பலியாக்குவதுதான்
ஐயகோ..., பேரவமானம்...
மனிதம் சீர்கெட்டு
மிருகம் தலைவிரித்தாடுகிறது...
ஆம்...!
பெண்மைக்கு பாதுகாப்பில்லா
ஆணாதிக்க உலகம்
இதுதான்
இதுவேதான்...
பெண்களின் வளர்ச்சி
துரிதமான நிலையிலும் - அதைவிட
துரிதமாக வளர்கிறது -! அவர்களை
சீரழிக்கும் ஆண்மை அசிங்கங்கள்...
ஈன்றவள் மட்டுமல்ல
எந்தஒரு பெண்ணுமே தாய்தான்...
ஏனென்றால்...
பெண்களால் மட்டுமேதான்
தாயாக முடியும்...
ஒரு பெண் குழந்தையாக
இருந்தாலும்கூட அவள்
எல்லோருக்கும் தாய்தான் - இதை
ஒட்டுமொத்த ஆணினமும்
புரிந்துகொள்ளும்வரை
பெண்களே ஜாக்கிரதை....
யாரையும் நம்பிவிடாதே...
ஒவ்வொரு அடியையும்
யோசித்து எடுத்துவை...
மனிதம் மரித்துவிட்டது
மிருகம் பெருத்துவிட்டது...
நீ தலைகுனிந்து
அடக்கத்தோடு நடந்தாலும்கூட - உன்
பாதங்களுக்கு அடியிலும்
ஆண்குறிகள் முளைக்கக்கூடும்
தயங்காதே...
அதை உன் செருப்புக் கால்களால்
மிதித்து நசுக்கிவிட்டு
உனது வெற்றிப்பயணத்தை தொடரு...!
பிரியாராம்.