கடவுள் பேசினார்

அவன் பிறந்த போது
அழவே இல்லையாம்..
பசி வரும் வேளை
சிறு நெளிப்பு..
அல்லது முகம் சுளிப்பு..
அதோடு சரி!
பேச்சு வந்த பிறகும் கூட
பேசும் வார்த்தைகள் ஒன்றிரண்டு..
முகத்தில் அமைதி கொண்டு..
பிள்ளை உற்று நோக்கும் அனைத்தும் கண்டு..
எப்போதும் அவன் மூளைக்குள் ஒரு வண்டு
ஏன் உலகம் இப்படி இருக்கிறது என்று
எங்கு பார்க்கினும் அத்து மீறல்கள்
எங்கும்...எதிலும்..!
அவனிடம் ஒரு நாள் கடவுள் பேசினார்!
"தம்பி! உனக்கென்ன வேண்டும் கேள்!" என கேட்க
"அதற்கு லஞ்சமாக .. என்ன வேண்டும் கேளும் " என்றான்!
பதறிய ஆண்டவனை பார்த்து அவன்,
"நீர் படைத்த மனிதர்கள்
அன்புக்கும்.. ஆசைக்கும்..படிப்பிற்கும்..
வேலைக்கும்..திருமணத்திற்கும்..
பதவிக்கும்.. பொருளுக்கும்,,
புகழுக்கும்..போலி மதிப்பிற்கும் கூட
லஞ்சம் தந்து வாழ்வதோடு
உனக்கும் கூட தருவதனால்
கேட்க தோன்றியது..
அதனால் கேட்டேன்" எனப் பகன்றான்!
சிரித்தபடி மோவாயை தடவிய பெருமான்,
"அது..அப்படித்தான் மகனே!
பின் நாளில் வரும் நரக வேதனைக்கு முன்பாக
கொஞ்சம் அனுபவித்து விட்டுத்தான் போகட்டுமே என
நான் விட்டு வைத்த விளையாட்டு பொம்மைகள் அவை!
தங்க தொட்டிலில் ஒரு நாள்..
கட்டாந்தரையினில் மறு நாள் ..
செல்வச் செழிப்பினில் சில நாள்..
தன் செல்வங்களாலே சீரழிவார் பல நாள் ..
கோபுரத்தின் உச்சியில் வைத்திடுவேன்..ஒரு நாள்
குப்பை மேட்டினிலே விழ வைப்பேன் மறு நாள்..
தப்பாகவே வாழும் இப்பாவியரை காட்சிக்கே வைத்திடுவேன்..
மற்றோரெல்லாம் படிப்பினையை கொள்வதற்கே..
இப்போது கேள்..என்ன வேண்டும் உனக்கு..?" என்றார்.
புன்முறுவல் பூத்த பிள்ளை சொன்னான்,
"இப்படியே வைத்திடவேண்டும் என்னை..
எழு பிறப்பிலும் மறவாது உன்னை
வணங்கும் நல் மனிதனாய் என்னை" என்றே!
சிரித்தபடி நகர்ந்திட்டான் அந்த ஆண்டவன்..
இவனை போல் உள்ள சிலருக்காகவென்று
பொழிந்திட்டான் பெரு மழையை அன்று!