நூல்கள் கற்போம்

நூல்கள் கற்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆடுகளாய்த் திரிவதற்கா மனிதர் நாமும்
ஆறறிவைப் பெற்றுள்ளோம்! சிந்தை செய்ய
மாடுகளால் ஆவதுண்டோ? அறிவி னாலே
மாற்றத்தைச் செய்வதெல்லாம் மனிதர் தாமே
ஏடுகளே அவ்வறிவை ஊட்டும் நல்ல
ஏணிகளாம் ஏணிகளில் ஏறு தற்கே
வீடுகளில் நாமெல்லாம் நூல கத்தை
வைத்திருக்க வேண்டியது கடமை யன்றோ !

நூலாடை உடலுக்கோ அழகைச் சேர்க்கும்
நூல்ஆடை அறிவிற்கோ கூர்மை சேர்க்கும்
பாலாடை நெய்யாகிச் சுவையைக் கூட்டும்
பாஆடை நெஞ்சிற்கோ மகிழ்வைக் கூட்டும்
நூலகமோ வாழ்விற்கு வழியைக் காட்டி
நுண்ணறிவை வளர்க்கின்ற கூட மாகும்
காலமெல்லாம் காழ்ப்பில்லா நண்ப னாகக்
கடைசிவரைக் காப்பதுவும் நூல்கள் தாமே !

படிப்பதற்குச் சோம்பலினைக் காட்டு வோர்கள்
பழுதாகி முன்னேற்றம் இன்றி வீழ்வர்
விடியலாக அறியாமை இருளைப் போக்கும்
விளக்காம்நல் நூல்களினை வாங்கி நாமும்
படிக்கின்ற பழக்கத்தை வளர்த்துக் கொண்டால்
பரந்தறிவு பல்துறையில் பெற்று யர்வோம்
நடிப்பான உலகத்தில் நன்மை தன்னை
நமக்களிக்கும் நூல்களினை நாளும் கற்போம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (22-Oct-14, 3:54 pm)
பார்வை : 49

மேலே