ஒரு கோப்பை தேநீர் இருதுளிக் காதல்
அவனும்.... அவளும்
நட்பாய் அமர்ந்திருக்க
அவைகளும் கூட இருந்தன..
இருகோப்பைத் தேநீரென...
அடர்சிவப்பு ஆடையில்
அழகாய்
இருக்கிறாய்.... மௌனம் உடைத்தான்
அவன்...
உனக்குப் பிடிக்குமா...?
உடைந்ததை நொறுக்கியவாறே
அவளும்.....
இல்லை... என் விருப்பம்
வெளிர்நீலம்...!!
ம்ம்..!? வேறென்ன பிடிக்கும்
நிறங்கள் தவிர்த்து...?
எழுத்து பிடிக்கும்... எழுதப்
பிடிக்கும்,..?!
யாரெழுதிப் பிடிக்கும்....?
கவிஜி.................!!
அப்படியென்றால்...?
ம்ம்ம்ம்ம்.... பால்வீதி
பற்றி படித்திருக்கிறாயா...?
ம்ம்ம்...!! அறிவியலில்...
அதுவல்ல இது....
இவனெழுத்தைப் படி....அழகியலோடு
பால்வீதியில் நடக்கலாம்
பத்தாம் கிரகம் பூப்பூக்க
ஏழாம் கிரகம் நீர் பாய்ச்சும்....
ஓ....! நீயென்ன
எழுதுவாய்...?
எதையும்... கண்டிப்பாய்
கவிதைகளல்ல....
சரி.... காதல் ..பற்றி..?!
எதுவுமில்லாமல் வந்து
எல்லாமுமாக இருப்பது.....!
கடவுள் .. பக்தி... பற்றி...?
அளவாயிருத்தல்
நலம்... முற்றியவனை
பைத்தியமென்பேன் ....!
அவள் குலுங்கி அதிர்ந்ததில்
கடைவாய்வழி
ஒழுகியிருந்த தேநீர்......
கோப்பைகளோரம் இரண்டுகுமிழ்
மட்டும் உடைத்து
தானும் சிரித்ததாய் சொன்னது
நன்றாகப் பேசுகிறாய் ...!
நீ... நன்றாகக் கேட்கிறாய்...!!
சரி..... அளவென்றால்....?
அவன் உணர்வதை
அடுத்தவர்மேல்
திணிக்காமலிருப்பது ...
நட்புக்குள் காமம்...?
கதைப்பதிலொன்றும்
பாதகமில்லை ...
கலக்க நினைப்பதுதான்
கொடும்பாவம்...!!
காதலில்.... காமம்...?
பூந்தோட்டம் நமதென்றால்
பூக்கள் பறிப்பதில் சுகமில்லை
எனக்கு...
கனியும் வரை
தவமிருத்தல் நலம்......!!
முத்தம்......... உன் கருத்தென்ன...?
வேசிக்கு காசு..
வேந்தனுக்கு ஆசை...
குழந்தைக்கு எவரும்.....
குமரிக்கு ஒருவன்....!!
மீண்டும் அவன்....
சரி.. முத்தம் பற்றி உன் கருத்து...??
கருத்தாய் ஒன்றுமில்லை...
உளத்தைச்
சொல்லிவிடுகிறேன் ......
நான் குமரியாகி விடுகிறேன்
நீ என்
ஒருவனாகி விடு.....!!
வெற்றிடமாகிப் போன
தேநீர்க் கோப்பைகளைப்
போலவே...
இலகுவாயிருந்தது இருவர்
மனமும்...
காதலுற்று...!!