அவள் அப்படிதான்
எழுத்தாணி எடுத்தெழுதும் கலைவாணி
திருகாணி எப்போ பிடிப்பாளோ?
படிக்கையில் தெரியும் வாணி
பருவத்தில் தெரிவாளோ ராணி !!
எழுத்தாளன் கையில் சிக்குண்டு
சுவாசம் திணறி வசவுக்குள் மாய்கிறாள்
சொல்லொன்று பொதுவென்று
செல்லரிக்கும் சொல்லாடையில்
வீதியுலா வருகிறாள் ...!!
தமிழ் வளர்க்க சங்கமமைத்த
தமிழ் நாட்டில் நாதியற்று திரிகிறாள்
வீதியெங்கும் வேஷம் போட்டு
மாறி மாறி அழுகிறாள்...!
கதைஎழுதும் எழுத்தாளனுக்கு
பேர்புகழும் பொன்னாடையும் தந்துவிட்டு
அவனெழுதும் கதையினிலே அழுக்காக படிகிறாள்
நன்னூலென்று தேர்ந்திடும் நூல்நடுவே சரிகிறாள் !!
புகழ்பெற்ற கவிஞனவன் துகிலுரிய
அபளையவள் ஆதரவற்று அழுகிறாள்
குழுமியிருக்கும் கூட்டமெல்லாம்
கைகொட்டி ரசிக்க கண்ணீரில் நனைகிறாள்
பணம் பண்ணும் பாடு ...
அவள்மட்டும் வெறும் கூடு !
எடுப்பார் கைபிள்ளை எம் தமிழ்
பொறுப்பார் இனமென்று
பிறர் தெளிப்பார் உமிழ்
கேட்பார் யாருமில்லை
கேடுகெட்டோர் நம்மினமே !