இவளும் இந்நாட்டு மங்கையே


என் திவ்ய தேசத்து
மங்கையே...!
இந்தத்
தனியார் பேருந்து
உனக்கும்
வாய்ப்பளித்த இறுமாப்பில்
காத்திருந்தது
கையேந்திய பசிக்கு
கனிவோர் வருகைக்காய்....

நமது
வயது வித்யாசங்கள்
என்பது
நீ நிற்பதும்
நன் அமர்ந்திருப்பதுமான
இடைவெளி மட்டுமே ...

இடுப்பில் பிள்ளையொன்று
அவனது முழுமுதற்க்
கனவென்பது
தாள்களை எட்டாத
சில்லறைகளே என்பதில்
கைப்பைக்குள்
வெகுவாய் விரைந்ததன
ஜனநாயக விரல்கள்...

கருகுவதெல்லாம்
மழை காணாப் பயிர்களோ
எம்
வள்ளலார் கூற்று
ஒப்புவிக்கும்
குருட்டு மனப்பாடங்களே...

ஏதடா விதியென்பீர்
இருக்கும்
ரொட்டித் துண்டுகள்
கொடுத்து
பெறுகின்ற சமநிலையையா..?!

தன்னாடு சுத்தம்
தன் சுத்தமும்
சொல்லிக் கொடுத்து
வருகின்ற
உள்ளத்தைக்
கூட்டு - பெரும்பாலும்
அதில்
கழிக்கப்படுவாய்...

சக மனித
உணர்வென்பது
இரக்கமும் கருணையும்
கைகூப்புவதல்ல ....

பிச்சைச் சொல்
நிறம் மாறிய போதும்
கவிஞர்கள் உவமிக்கும்
காட்சிப் பொருளாய்
கண்டதும்
பரிணமிக்கும்
வகைப்பாட்டுச் சிற்றினமாய்
பால் முறை
தேடுகின்றது....

இதுவே பாரம்பரியமென
வந்தாரை - இனி
வருவோரைத்
திருஷ்டி கழிக்கும்
பயணங்கள் முடியவில்லை ...

இதோ
பதறாத வேகத்தில்
நடந்து செல்கின்றாள்
முகம் திருப்பும்
மனிதர்களின்
சன்னலோர வேடிக்கைக்காய்....

இருக்கைகையை விட்டு
அவள்
உள்ளங்கை கசிந்தது
ஓட்டுரிமை
வேர்வையாக - இரண்டு
இனிப்புக்கள்
போதுமா என்ற
அரைக் கேள்வியுடன்....!

எழுதியவர் : புலமி (17-Nov-14, 1:38 am)
பார்வை : 87

மேலே