உயிரே எங்கே நான்
![](https://eluthu.com/images/loading.gif)
அவனில் நானில்லாத
பிரபஞ்ச ஓட்டையில்
என்னில்
தாளம் தப்பும்
பைத்தியக்காரன் ....
அதுவொரு
மழைக்கால காதல்
நேற்றுவரை ....
இன்று
பிசுபிசுத்த வலியோரம்
நசிகின்ற நினைவுகள்
காளான் குடைகளாய் ....
தொலை தூர
வேடிக்கையாய் போனது
நீயற்ற நொடிகள் ...
உணர்வுகளின்
பதுங்கு குழிப் போராட்டத்தில்
வேரறுத்த ஆயுதவாதி ....
வைக்கோல் திணித்த
பொம்மையவன்
சிறகடித்த நாட்களை
ஏங்க வைத்த
மாயக் கனவு ....
விரல்கள் வழியே
கடக்கும்
அவனற்ற பயணங்கள்
எல்கை முடிவுப்
பலகையோடு ....
என்றாலும் நிற்கவேயில்லை
ஒரு தேடல்
தரை தடவும் மனதில்
தட்டுப்படும்
கண்ணாடிச் செதில்களாய்
நீ மட்டுமே ...
சிறந்த பொய்யொன்று
வழக்காடும்
நீதிமன்ற வாசலில்
காற்றுக்கு அசையும்
கதவுகளென
விழிகள் மூடித் திறக்கின்றேன்
உடலெங்கும் சிரித்தது
மரணம்....
நான் ரசிக்கும்
இரவுகளின் மின்மினிக்
கனவுகளாய்
இதயம் ஒளிர்பவன்
ஏனோ
உயிர்கொல்லி துடிப்புகளாய்....
எப்போது
இனி
கிடைப்பேன் நானாக
மீண்டும் கல்லாய் .....!