சிகரமும் கீழாகத்தென்படும்

தனிமனித ஒழுக்கம்
பேராசை மயக்கத்தில்
தடுமாறி -
அதர்மத்தின் மடியில்
சாய்வதா?

வாழ்க்கைச் சக்கரத்தின்
அறமென்னும் அச்சாணி
முறியுமளவிற்கு
சேகரித்த பொருளின்
சுமைதாளாமல்,
ஆயுள் வாகனமே
சேதமாகிப் போவதா?.....

சபலங்கள்
அசைபோடும் தீவனமாய் .....
பாவங்கள் -
படர்கின்ற கொடிமரமாய் .....
மனிதா!
அவநம்பிக்கையின்
கரங்களை பற்றிக்கொண்டு ,
ஆவேசமாய் ஓடுவது
அழிவுப் பாதைக்கா?

இந்த
அவசரயுகத்தில் நீ
தொலைந்ததை.....
அடையாளப்படுத்தி,
சுயவிலாசம்-
சொல்லட்டுமா!

காயப்படுத்தாமல்
உன்னை
ஆயத்தப்படுத்துவதற்கு
உத்தி சொல்லட்டுமா !

உள்ளும் புறமும்
அழுக்கினை நீக்கி
உத்வேகம் பெற்றிட
நெறிப்படு....

எழுதப்படிக்கத் தெரியாத
மூதாதையரிடம்
மண்டிக்கிடந்த
மனித நேயத்தை
கிரகித்துக்கொள்....!
"இறையின் பிம்பம் மனிதன்"
என்ற மகத்துவம்
புலப்படுவதற்கு தலைப்படு.............

தீர்வுகளின் திசைநோக்கி
சிந்தனை சிறகடி....
சிகரமும் -
கிழாகத்தென்படும்!

எழுதியவர் : குமாரவேலு (24-Nov-14, 10:20 pm)
பார்வை : 69

மேலே