உறவுகள்
உறவுகள்...!
மாடர்ன் உலக
வௌ்ளப் பெருக்கில் வாசலிழந்த ஒரு 'வாடகைத்தாய்'...
ஏங்கித் தேடித்
துவளும் மனங்கட்கு "கிராமத்தில் தேடிப்பாருங்கள்!" என்று
நகர வீதிகள் கைகாட்டும்
ஓர்
'நாடிழந்த நெசவாளி'...
நெசவாளியா?
ஆம்...!
குடும்பத்தறிக்கு பாசப்பஞ்சுகளை
அன்பினால் இழையாக்கி நிர்வாண மனங்களுக்கு
நேச ஆடை தருவித்து
நவநாகரிக மேதைகளுக்கு
நன்நாகரிகம் காட்டமுயன்ற 'நயவஞ்சகன்'...
பள்ளாங்குழிகளில்
பாசம் கடத்திய
புளியம் முத்தும் ,
விஷமில்லா பாம்புகளுக்கு விலாசம் காட்டிய பரமபதங்களும்,
நாகரிகத் தேரின்
கால்களில் நசுங்கிய
மனுநீதி சோழர்கள் ...
வைகையின் மண் வாசம்
புகுந்த வீட்டுச் சீராய்
தன்னொடு கொண்டு வரும்
ஐயிரை மீன் குழம்பும் ,
நாநுனியில் நெஞ்சத்தையும்
உருகி ஒழுகச்செய்யும் கோழிக்குருமாவும்,
அத்தை -அம்மா -மதினிகளின் கைப்பக்குவத்தில் கலங்கடிக்க...
அரவணைப்பும் அன்பும்
பெறுவதற்கே
நோய்வேண்டி
தவம் கிடந்த
காலங்களும் ,
தீபாவளி பொங்கல் எல்லாம் சொந்தங்களின் சோரூட்டலுக்கு
தினம் பிறக்க
நாள் கேட்கும்
ஏங்கல்களும்,
கண்ணீருக்கு
ஆனந்தத்தை அடைமொழியாய் இட ...
"பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு" என்று சினிமா பாடலுக்குத் தாளம் தட்டும்
மனிதமனம்
வாழ மட்டும்
ஒப்ப மறுக்கும்
முரணான வேடிக்கையை விஞ்ஞானமும் தான்
விடையாய்த் தேடுகையில்
எங்கோ ஒரு மூலையிலே
எசக்காத்து வீசையிலே
ஏழை வீட்டு்க்
கவலச் சோற்றில்
அன்பும் சேர்ந்து ஊட்டப்படலாம்...
விஞ்ஞானமும் இதை
படிக்க நேர்ந்தால்
பஸ் ஏறி
போய்ச்சேரட்டும்
அவ்வன்பு தேசம் நோக்கி மனநிர்வானத்திற்கு
ஆடை தேடியே ...-JK