மரப்பெண்ணின் வேண்டுகோள் -கயல்விழி

குறுகுறுவென பார்த்ததால்
குறும்பன் என நினைத்து
விட்டேன்

இளைப்பாற நிழலையும்
இதமான தென்றலையும்
இலவசமாய் கொடுத்து
நின்றேன்

பசியாற கனி அளித்து
படுத்துறங்க மடி கொடுத்தேன்

தனிமையில் வந்த அவன்
தடவி கொடுத்து சென்று விட்டான்

ஓர் இரவு தான் கழிந்திருக்கும்
உதயமானான் கதிரவன்

அவன் கதிரின் ஒளியினிலே
நான் விழித்தேன் கண் கசக்கி

இடையோரம் ஓர் கரம் பட
திகைத்தவளாய் திரும்பி பார்த்தேன்

பார்த்து என்ன பாவியவன்
அருக்கின்றானே என் கொடியிடையை

வலியால் நான் துடிக்க
வக்கனையாய் சிரிக்கின்றான்

குறிப்பறிந்து செல்லத்தான்
கொடியவன் நேற்று
வந்துள்ளான்

இன்று
கூட்டத்தோடு கூடி
வந்து கும்மாளம் போடுகின்றான்

நிழல் கொடுத்து உணவளித்தேன்
நீரோடு தென்றலும் நான்
கொடுத்தேன்

கொடுப்பதெல்லாம் பெற்றுக்கொண்டு
வெட்டிக்கொல்லுதல் நியாயமா?

என்னை அறுக்கும் போதே
நினையுங்கள்
அழிவது நான் மட்டும் இல்லை
எண்ணிலடங்கா வளங்களும் தான்

நன்றி மறந்த மானிடரே

நன்றி மறப்பது நன்றன்று
நட்டு வையுங்கள் ஓர் மரக்கன்று .!

எழுதியவர் : கயல்விழி (30-Nov-14, 1:54 pm)
பார்வை : 124

மேலே