முதுகெலும்பி 12

“அப்பறங் கணக்கப்புள்ள... பாத்து ரொம்ப வருசமாச்சி.. நல்லா இருக்கீயளா ? வீடு வாசலு காரு கப்பலுன்னு செழிப்பா இருக்குறீய போல....” நடக்கப்போற சல்லிக்கட்டுக்கு இப்பவே வெள்ளோட்டம் விட்டுக்கிருந்தாம் மயிலான்.

அவனப் பாத்துக்கிட்டே கணக்கப்புள்ளையும் “ அட.... மயிலானா .... எப்ப வந்த..? நல்லா இருக்குறீயா..? இது வரைக்கும் ஒண்ணும் பிரச்சின இல்ல..இனிமேலும் அதுவே தொடரணுமுன்னு ஆச..ன்னு அவனோட வரவ புரிஞ்சிகிட்ட மாதிரி....பதில் சொல்லிகிருக்கப்பவே... நாலடி எட்டடியுமா பறக்க பறக்க ஓடியாந்ததுல மூச்சு வாங்குனிச்சி எனக்கு.....

“ஹ்ம்..ஹ்ம்.... வா...வாங்க... சின்னத்தம்பியும் கூட வந்திருக்குது. நல்லா வளந்துருச்சே.. பெரிய படிப்பெல்லாம் முடிச்சிருச்சா..? வெளிநாட்டுக்கு எதுவும் அனுப்புறியளா.. ன்னு கேட்டுக்கிட்டே அவருக்கும் முன்னாடி வந்து நின்னெம்.

“அப்பறம்...முதுகெலும்பி.. இந்த வருசம் மானம் நல்லா மொகம்பாத்து பூமித்தாயி அள்ளிக்குடுத்துருக்கா போல... ரொம்ப சந்தோசமா இருக்குதப்பா.. நீங்க நல்லா இருந்தாத்தான எங்கள மாதிரி ஆளுகளுக்கு சீவனம்..நீங்க நொடிச்சியள்ன்னா அப்பறம் நாங்களும் நொடிச்செம்... ஆங்.. இவெம்தா.. நம்ம சின்னப்புள்ள... அட என்னத்த... உங்கள மாதிரி மனுசமக்கள விட்டுப்புட்டு எங்குட்டு அனுப்ப வெளிநாடு.. வேனக்கட்டின்னு.... .....

"எனக்கும் வயசாயிருச்சில்ல.... இஞ்சாரு.. இடுப்புலையே சக்கர மாத்துரைய கட்டிக்கிட்டு அலையிறம்.... அதே.. இவெனயுங் எங்கூட கூட்டிகிட்டு வந்தெம். கையக்காமிச்சி விட்டுட்டா ஒங்க தயவுல பொழச்சிக்கிருவாம்பாரு...”ன்னு மொத்தமா சுருட்டியள்ள தாம் பேச்சுத்தெறமைய பாயா விரிச்சி பளபளன்னு வெளக்கி விரிச்சிக்கிருந்தாரு......

சின்னத்தம்பின்னு சொன்ன சின்னப்பயலுக்கு நம்ப ஓடுநண்டு வயசுதாம் இருக்கும். அப்பெனோட வாரிசுன்னு காமிக்க முழுக்கைய மொழங்கை வரைக்கும் மடிச்சி விட்ருந்தாம்.இந்தக் காலப்பயன்னு காமிக்க சீன்சு பேண்டு போட்ருந்தாம்... அவுக அப்பெனுக்கு பின்னாடி நின்னு அப்பப்ப.. மூக்குக்கு முன்னாடி வீசிக்கிட்டும்.. தொடச்சிக்கிட்டும் இருந்தாம். அவுக வந்த காரு அங்கிட்டே நிக்கி.. ஆத்துக்கு இந்தப்பக்கந்தான நம்ம களமோடு. அதுனால அவுக அந்தப் பக்கம் நிறுத்திப்புட்டு நடபால வழியா வந்திருந்தாக...

“அப்பறமென்னப்பா... எல்லாம் முடிஞ்சி எப்பவும்போலவே .... அந்திக்கி நம்ம லாரி வரும்.. அதுல மூட்டையெல்லாம் ஏத்தி விட்ருங்க.. நாங் காசு ஒரு ரெண்டு நாள்ல பெரட்டி குடுத்து விட்டற்றேம்...... எல.. எங்கடா இந்தப்பய....... அட.. முன்னாடி வா.. என்ன புதுப்பொண்ணு மாதிரி பின்னால நின்னுகிட்டு நம்ம சனமுடா..." ன்னு சொல்லி...

"போயி... காருல பின்னாடி சாக்கு வச்சிருக்கமுல்ல.. அத.. காமிச்சி விடு இவுக வந்து அள்ளிக்கிருவாக.... "யேய்... யாரையாவது அனுப்புப்பா.. ன்னு என்னைப் பாத்து சொன்னாரு....

“இருங்க.. கணக்கப்புள்ள... இதுவரைக்கும் நீங்க வெலயப்பத்தி ஒத்த வார்த்த சொல்லலை.” ன்னு துண்ட மடிச்சிக்கட்டிக்கிட்டே வந்தாம் மயிலான்.

“நெனச்செம்.. எங்கடா இன்னும் வள கொழுத்த நண்டக் காணுமேன்னு..... என்ன முதுகெலும்பி புதுசா இருக்கு... வெலயெல்லாங் கேக்குறீய..எப்பவுங் குடுக்குறதுதான...மூடைக்கி ஐநூறு ரூவா... பத்தாதோ..? அப்பறமென்ன..” கொஞ்சந் தொரனையாத்தாங் கேட்டாரு கணக்கப்ப்புள்ள......

மயிலாம் மறுக்கால வந்தாம் “ மூடைக்கி ஐநூறு ரூவாயா..? சரி... மூடைக்கி எத்தன கிலோ .. படி.. மரக்கா.. அளவு ஏதாவது...? நீங்க குடுக்குற சாக்க ரொப்பனும்.. அது மூடைக்கணக்கு இல்லையா..?”

“என்ன தம்பீ.......... வார்த்த தடிக்கிது...?” கணக்கப்புள்ளயோட மொகம் லேசா செவந்திச்சி..

“அவங் கேக்குறதுங் நாயந்தானுங்களே... யாவாரத்துல கணக்கு வழக்கு கேக்குறது நல்லதுதான..ன்னு நாம் பொறுமையா பதில் சொல்லிகிருக்கப்பவே.... சின்னப்பய குறுக்கால வந்தாம்.

“அப்பா....... இவங்ககிட்ட என்ன நீங்க போயி கணக்கு பேசிக்கிட்டு. நாலு நாளு வயிறு காஞ்சா தானா வருவாய்ங்க.. நாம் பொறந்ததுல இருந்து ஒங்க முன்னாடி கையக் கட்டிக்கிட்டு நின்ன அன்னக்காவடிப் பயலுக.. இன்னைக்கி தோள்ல துண்டப்போட்டு பேசுறாய்ங்க..எந்திரிங்க போவம்... நம்ப மில்லுக்குதான வரணும்.....அப்பம் பேசிக்கிரு.......... அவெம் முடிக்கிறதுக்கு முன்னாடியே.....

மயிலங் கொணம் எனக்குள்ள பூந்திருச்சி...

“அடங்... எங் ஒன்றையணா கொய்யாக்கா.... ஒரு எத்து விட்டேம்னா பல்லு ரெண்டும் தெறிச்சிரும்... நாந் திண்ணைய புடிச்சி நடக்குறப்ப எஞ்................ வேணாம் .. பொம்புள புள்ளைக நிக்கி ... வாயில நல்லா வந்துரும்.... வளந்த பய நீ.......! என்னடா அவெ.. இவெ.... அன்னக்காவடின்னு...ஒங்க வீட்டு பண்ணைக்காரப்பயலுகன்னு நெனச்சியோ...? எனக்கு மொதமொதலா வந்த கோவத்தப் பாத்து அத்தன பெரும் வெறச்சி நிக்க... மயிலம்மட்டும் பக்கத்துல வந்து முதுகுல தட்டிக் குடுத்தாம்.

என்ன தம்பீ... பொரட்சி பண்றீயளோ” ன்னு கணக்கப்புள்ள நக்கலாக் கேக்க...

மயிலான் “ அந்தளவுக்கெல்லாங் கெடையாது கணக்கு....(புள்ள போயிருச்சி இப்ப ) நீங்கல்லாம் வாய்க்கப் பட்டவைங்க..ஒங்கள.. எதுக்க முடியுமா..?ன்னு நக்கலா சொல்லிப்புட்டு.......” எங்க பொருளு... எங்க வெல...அம்புட்டுதேம்..ஒன் ஒரக்கடயில வந்து நா வெல வச்சா நீ சிரிச்சிக்கிட்டே வெத்தலபோட்டு துப்புவன்ன...இங்க.... நா நெல்லு பதம்பாத்து துப்புவெம்...இப்ப அவங் கொரல்ல வெறி ஏறிருந்திச்சி.............

“சரி............ இப்ப என்னதாஞ் சொல்ற கடைசியா...? சின்னப்பய நடுங்க ஆரம்பிச்சிருந்தாம் நா போட்ட போட்டுக்கு... அதுல கொஞ்சம் பதமா எறங்கி வர ஆரம்பிச்சிருந்தாரு கணக்கு....

இப்ப நானு "இஞ்சாருங்க.. ஒங்க கட மொதக்கொண்டு எல்லா எடத்துலயும் வெலவாசி வெட்டுப்பாற மரம்மாதிரி வளந்துக்கிட்டே போகுது.. எங்க பொருளத் தவிர............... நீங்கதா ஓரமெல்லாம் அனுப்புறீக...அது வாறது வேற சாக்குல...மறுக்கா நெல்லு வாங்க வாறது வேற சாக்குல...எம் பாட்டம் காலத்துல இருந்து இங்கின எடைபோட்டு நாம் பாத்ததே இல்ல.... எல்லா ஒரு மனக்கணக்குதேம்... இனிமேல அப்பிடி இல்ல... வருசா வருசம் வெல வப்பம்... எங்க ஒழப்புக்கு தகுந்தாப்புல...ஒங்க ஒர வெல கூடுனா.... இங்க நெல்லு வெலயுங் கூடும்............

" வெளையவச்சி விக்கிற நாங்க அப்பிடியேதா இருக்கம்.. அத வாங்கி விக்கிற நீங்க வளந்துக்கிட்டே போறீக...அப்ப தப்பு எங்க நடக்குது...? நாங் கேக்கக் கேக்க வெளிறிகிட்டு இருந்தாரு கணக்கு.....

இதுவரைக்கும் சுத்திநின்னு கையக்கட்டிக்கிருந்த கூட்டம் கையப் பிரிச்சிவிட்டு எதோ புரிஞ்ச மாதிரி நாலடி முன்னாடி வர.... நெசமாவே அந்த நாலு கண்ணும் மெரண்டதா நாம் பாத்தெம்....

“சரிப்பா.... முடிவா என்னதாஞ் சொல்லுற...” எங்க கையிக்கே விட்டுட்டாரு கணக்கு...

இப்ப மயிலான் “ இங்க எடமிசினு வரணும்.... அள்ளுக்கூலி உங்களோட...அறுப்புக்கூலி மட்டுந்தெம் நாங்க..சரியா அறுவதுகிலோ அளந்துவச்சி ஆயிரத்து நானூறு ரூவா குடுத்துருங்க..இதுக்கு மேல வச்சி விக்கிறது ஒந் தெறம...”

"ஒரு..... ஆயிரத்த்த்...." கணக்கு பேரம் பேச எந்திரிக்க....

நாங் குறுக்கால வந்தெம்.. “ அந்தப் பேச்சே இல்ல.. கணக்கு.. அம்புட்டுதேம்.. சரின்னா இப்பவே வரச் சொல்லு.. அளந்து விட்ருவோம்..இல்லன்னா போயிகிட்டே இரு.. தீர்மானமாச் சொன்னெ நேரம்...

சீத்தாயி அப்பாயி....மாரி சித்தப்பாகிட்ட சொன்ன...” அட கந்தநாதா... இத்துன காலம் இந்தப் படுவாவி நம்மள என்னமா ஏச்சிகிட்டு கெடந்துருக்காம்.. கொல்லையில போவ... எதோ இந்த ரெண்டு புள்ளைகளும் நம்மளுக்கு விடிவு காலத்த கொண்டுவந்திருச்சிகன்னது .............. எங்காதுலயும் விழுந்திருச்சி.... ரெண்டு பேரும் சிரிச்சிகிட்ட அதே நேரம் கணக்கு.. லாரிக்கும் மிசினுக்கும் ஆள விட்ருந்தாரு.....

ஆக ஒருவழியா நெல்ல வித்துபுட்டோமுங்க... நல்ல வெலைக்கி... இனிமே என்ன.. பொங்க.. வருது... அப்பறம் கல்யாணம்....
(பொங்கலுக்கு வாங்க )

எழுதியவர் : நல்லை.சரவணா (3-Dec-14, 10:43 am)
பார்வை : 164

சிறந்த கட்டுரைகள்

மேலே