நீயே கடவுள் என்பவன்
தொலை தூரத்து பாலையில்
மாடுகள் பூட்டிய சகடம்
புழுதிகிளப்பி
மணல் மேடுகளுக்கு
மந்திரம் சொல்லிக் கொடுக்கும்
விசுவாசித்த தாவரங்கள்
இலைகளை அசைக்காமல்
எதை பறிகொடுத்துவிட்டு
இப்படி
சலனமின்றி ஒரு விரதம்…..
நாளைய
ஜீவன் முடிப்புக்கு
இன்று ஒத்திகை பார்க்கப்பட்டது
தூக்கு அதிகாரியே
தூக்கில் தொங்கினார்
அவருக்கு அடக்கம் முடியும்வரை
இவனுக்கு அடக்கம் இல்லை.
உண்ணும்போது
விழும் பருக்கைகள்
ஒரு கூட்ட எறும்புகளுக்கு
ஒரு மாத சாப்பாடு.
இன்னும் எங்கள் ஜீவன்
எச்சில் இலைச் சோறுகளில் கழிகிறது
காலையில் காளையனாகவும்
மாலையில் மாலையனாகவும்
அவதாரம் பூணுமந்த ஆண்டவன்
காலையும் மாலையும் இல்லாதவன்
அவனுக்கேது காலை மாலை
அவனுக்கெதற்கு காசு மாலை.
கலங்கரை விளக்கங்கள்
கப்பலைப் பார்ப்பதில்லை
நீரதிகம் அருந்தியதால்
நீ உப்பைத் தின்பதில்லை
வித்துவான் கை பட்டு
வீணை இசை தருவதில்லை
இரண்டுக்கும் நடுவில்
இருப்பதை தேடு
இல்லையென்று நீ சொன்னால்
உன்கைபட்டு
ஏனிசை வரவில்லை
திருப்பங்களில் தான்
துவக்கம் தெரிகிறது
மரணங்களில் தான்
ஜனனம் வாழ்கிறது
கண்ணுக்கு எதிரில் வெற்றிடம்
உன் கண்ணுக்கு வராமலே
ஒரு கோடி சலனங்கள் .
மறுத்து போகாதே
நீ -
இருப்பதும்
இறப்பதும்
இதன் மூலமே .
என்னை நீ பார்ப்பதும்
இதை நீ படிப்பதும்
அதுவே ஆதாரமே .
ஒன்றுக்கும் இரண்டுக்கும்
இடையில் ஒன்றைத் தேடு
அந்த ஒன்றை கண்டுகொண்டால்
உன்னை வெல்ல ஆளில்லை
அப்போது
நீயே கடந்து உள்ளவன்
நீயே கடவுள் என்பவன்.
அவ்வமயம் எல்லோரும் சொல்வார்கள்
இக்கவியைப் போல
இவனும் புரிந்தும் புரியாதவன்