மீத்தேன் மறுத்து விவசாயம் மீட்போம் - வினோதன்

நான்கு ஹைட்ரஜனும்
ஒரு கார்பனும் - குழுமி
கை கோர்த்து - எம் விளை
நிலங்களுக்கு கீழே
கூடு கட்டி வாழ்கின்றனவாம் !

சதுப்பு நிலக் காடுகளின்
சதுக்க பூதம் - வானோரம்
எரியக் கண்டதுண்டு !
கூடுடைத்து வருமாம்
எரிந்துசாக மீத்தேன் !

பற்றி எரிவதை
காசாக்க கனாக்கண்டு
பூமியின் வயிறு பிளக்க
வரிசையில் நிற்கிறது
கூட்டம் - மூளை முடமாகி !

எதை விதைத்தாலும்
விளைச்சல் நிச்சயம்
என்றுணர்ந்த மனிதன்
செங்கல் விதைத்து
கட்டிடம் விளைவிக்கிறான் !
நல்ல விலை வைக்கிறான் !

சுற்றுச் சூழல் கெடுத்த
நம்மை பழி வாங்க
பருவ மழை பொய்த்துவிட,
நிலக்கறி வியாபாரிகள்
நாள் தோறும் விரட்ட...
மீத்தேன் புசிக்க - ஒரு
கூட்டம் துரத்துமெனில்...
எங்கு போவான் விவசாயி ?

வேறு வழியில்லை எனில்
பூனை புலியாவது விதி !
கதிர் அறுக்கும் அருவாக்கள்
கழுத்தும் அறுக்கும் தானே ?

எவன் வீட்டு உலையில்
மண் விழுந்தால் என்ன...
அணு உலை முக்கியமென
முடிவெடுக்கும் - என்
பிரதி"நிதி"களுக்கு - பணமொழி
அன்றி வேறெப்படி புரியவைக்க !
உன் தொப்பை தொட்டதுகூட
என் கழனியின் உப்பென்று !

நெற்களஞ்சியத்தின்
நெஞ்சறுத்து தான்
மீத்தேன் ருசிப்பீர் எனில்
உங்கள் கழுத்தறுத்து - ஏன்
குருதி ருசிக்க கூடாது ?

புலிக்கொடி பறந்த பூமிதனில்
அடக்கு முறை பலிக்காது !
அடக்க எண்ணி பலியாகதே !!

இயந்திர நாக்குகள் - எம்
மண்ணை கவ்வினால்
நீரும் கவ்வியே தீர்வீர் !
தாயை காக்க கொலை
செய்பவன் தீவிரவாதியெனில்
இப்போது சேர்த்துகொள்ளுங்கள்
என்னையும், எனையொத்த
சோழத்தின் இளவல்களையும் !

மீத்தேன் மறுப்போம் ...விவசாயம் மீட்போம் !!!

(மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கவிதை எழுதும்படி சக எழுத்தாளர்களுக்கு என் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்...)

நன்றி
- வினோதன்

எழுதியவர் : வினோதன் (7-Dec-14, 7:50 am)
பார்வை : 279

மேலே