இசை
இசை-
முத்தமிழ்ப் பூவில் ஓரிதழ் !
வீணையின் நரம்பிசை நாதம்
தேனாகப் பாய்கையிலே- நம்
நாடி நரம்புகளும்
நெகிழ்ந்து போய்விடும் !
மூங்கில் துளைகளில்
சங்கீதம் பிறக்கயிலே
உயிரனங்கள் அனைத்தும்
கட்டுண்டு போய்விடும் !
கிராமத்து தமிழிசையோ
மண்வாசனை குழைத்து
நாட்டுப்புற பாடலென்று
கவிதைகளை கௌரவிக்கும் !
காலத்தை வென்றிட்ட
கர்நாடக இசையோ
கார்மேகங்களையும்
கணத்தில் கூட்டி விடும் !
கஜல் பாடும் வட இசையோ
கவிதையை உள்வைத்து
காற்றினிலே கலந்து
காதுக்கு விருந்தாகும் !
திரைஇசையும் ராகங்களை-நம்
தின வாழ்வில் சங்கமித்து
பின் வரும் நாட்களிலே
அசைபோட ஏதுவாகும் !
கவ்வாலிப் பாட்டுக்களை
கரவொலிகள் வரவேற்கும் !
கானாபாட்டும் குத்துப் பாட்டும்
கும்மாளம் போடவைக்கும் !
மார்கழித் திங்களின் சுப்ரபாதமும்
மசூதியில் எழுகின்ற தொழுகை நாதமும்
தேவாலயத்தில் உயரும் மணியோசையும்
தேனிசையாக இதயம்தனில் பாயும் !
ராகம் எதுவானாலும்
எவ்வழியில் வந்தாலும்
பாடலின் மொழி ஏதென்று
புரியாது போனாலும்
இதயங்களை கோர்த்திடும்
இனியசக்தி படைத்திட்ட
இசையைப் பொதுமொழியாக்குவோம் !
இந்தத் தரணியில் அன்பையே பெருக்குவோம்!