அதிரும் துர்வீச்சம் இன்னொரு கிளர்ச்சி
நான் ஓர் துர்க்குழந்தை
அல்லது தமிழீழத்தவன்
ஆயின் அகதித் துயரில்
சடலமாக்கப்பட்டவன்
எனது பயணத்தில் உயிரொரு பிரமை
வேதனைக்குரிய காயங்களின் கைதியாய்
அழுகிய குருதியில் பதுங்கியிருக்கும்
என் கைகளில் யுத்தங்கள் விழிக்கிறது
விரையும் ஆகாயக் கருமையில்
வீழ்ந்த எல்லைகளையும் கடல்களையும்
முத்தமிட்டுக் கொண்டேயிருக்கிறேன்
அவைகள் தாயகத்தின் வெளிச்சமுகம்
மிகப் பீழைகொண்ட நிகழ் யுகத்தில்
கண்களில் எஞ்சியிருக்கும் கோரத்தின்
மூர்க்கத்தை எனது வீடாக்குங்கள்
தோற்றோரின் கிழக்கு குறுகியது
இனி கனவைப் பள்ளங்களில் போடுவென
என்னிடம் நீங்கள் சொல்ல முடியாது
அருந்துவதற்கு என் கண்ணீரும்
உண்பதற்கு என் கனவும்
புதிய திசையிலிருந்து ஊறுகிறது
நான் குதூகலிக்கிறேன்
என் தேசமெங்கும் நட்சத்திரத்தின் நரம்பு
உதயத்தின் தலையை தடவுகிறது
கொடுஞ் சிறையில் புலர்ந்த வதைகளிலேயே
இன்னும் வெல்லப்படாததை அறிந்து
பாடல்களில் பதியமிடுமெனக்கு
சலிக்காத ஒரு ருசி
கம்பீரமான மரணம்.