நீ நடுங்குவது யாருக்கோ
உன் கருங்கூந்தலை
கைது செய்திருக்கும்
காற்றை விடுதலை செய்ய
என் விரல்களிடம் விவரம் கேட்கவா?
உன் காது குழிகளில்
சிக்கியிருக்கும் கறுத்துப்போன
வேலங்குச்சிக்குப் பதிலாக
கால்பவுனில் நகையெடுத்து
நான் மாட்டவா?
தேன் ஊறும் உந்தன் இதழ்களில்
தேன் எடுக்க எந்தன் இதழை
வண்டாக மாற்றி வரட்டுமா?
தினந்தினம் உன்னைத்
தேடித்தேடியே வாழ்நாளைக்
கழிக்கின்ற எனக்கு
வசந்தத்தைத் தரமாட்டாயோ?
தாமரையாய் மலர்ந்திருக்கிற
தாவணி நிலவே...
உன்னைத் தாலிகட்டி
ஊரறிய அழைத்துச் செல்ல
தாம்பூழத் தட்டுடன் வந்து
தலை வணங்கட்டுமா?
அங்கம் தெரியாத அளவுக்கு
ஆடை உடுத்துகின்ற ஆப்பிளே...
உன் அழகை ரசிக்க
நேரம் குறிக்கவா?
நாடும் மொழியும்
நமதாகிவிட்டபோதிலும்
நாம் இன்னும் சேராமல்
இருப்பது ஏனோ?
எத்தொழில் எங்கும் செய்தாலும்
ஏற்றம் காணலாம் என்கிறபோது
என்னை - நீ ஏற்றுக்கொள்ளாததற்குக்
காரணம் என்னவோ?
நாளைய உலகை வெல்வதற்கு
நம்பிக்கை இருக்க
நீ நடுங்குவது யாருக்கோ?