மாவோ சேதுங் கவிதை

கவிதை என்பது சொல்லவருவதை படிமம் மூலமே சொல்வது. உரைநடையைப் போல நேரடியாக சொல்வது அல்ல. எனவே உவமையையும், உருவகத்தையும், பீடிகையும் கவிதையில் தவிர்க்க இயலாது....
நவீன கவிதை எழுத வேண்டுமெனில், வர்க்கப் போராட்டத்தை, உற்பத்திக்கான போராட்டம் ஆகியனவற்றை பிரதிபலிக்கும் பொழுது சொல்லவரும் கருத்தைப் படிமம் மூலமாக சொல்ல வேண்டும்.செவ்வியல் செறியைக் கண்டிப்பாகப் பின்பற்றக் கூடாது..........எதிர்காலத்தில் கவிதையின் போக்கு இப்படியிருக்க அதிகம் சாத்தியம் உள்ளது -நாட்டுபுற பாடல்களிலிருந்து வடிவத்தையும் சாரத்தையும் எடுத்துக் கொண்டு ஒரு புதிய பாணி வடிவத்தில் வளரும்.. சாமான்யரும் வாசிக்கத்தக்க வகையில் ஈர்ப்பைக் கொண்டிருக்கும்-மாவோ சேதுங்
அவருடைய கவிதைகளுள் ஒன்று

ச்சாங்ஷா

தனியே நிற்கிறேன் வீழ்கால குளிர் உறைக்க.
ஷியாங் ஆறு வடதிசை ஏகுமிடத்தின்
செம்மஞ்சள் தீவு முனையில்;
செவ்வழலாய் நிறம்பற்றியெரியும் மரங்கள்
படர்ந்துவிரிந்த கானக மலைகள்
ஆயிரமாயிரம் காண்கிறேன்.
நீல நீர்களில் நூறு படகுகள்
பாய்ந்துச்செல்வதைப் பார்க்கிறேன்

விண் பிளக்கும் கழுகுகள்.
நீரடியில் சீறும் கயல்கள்.
உறைந்து நிற்கும் வானின் கீழே,
சுதந்தரம் நாடி போரிடும் உயிர்கள்.
வேதனைபடரக் கேட்கிறேன்,
பாரொடு விண்ணாய் பரந்த இப்புவியில்
மூழ்கவோ மிதக்கவோ, விதிப்பவர் யாரோ?

நூறு தோழரும் முன்பொருநாள்.
இணைந்து வந்தோம்-

அற்றைத் திங்கள், அந்த ஆண்டு,
மறத்தல் இல்லை, நிறைவான நாட்கள்.
துடிக்கும் இளையர், பள்ளி மாணவர்,
கொள்கையில் நேர்மை, பிறழாத வழிகள்.
உணர்ச்சிப் பிழம்பு, தடை தளை தகர்ப்பு...

மலை நதி சுட்டி, திசைவழி காட்டி,
சொல்தீ வளர்த்து மக்களை எழுப்பினோம்.

நினைவில் நிற்குமோ இன்றும்,
அன்று
நீர்மிசை பரந்து நீண்டு சென்றதும்
பாய்ந்தப் படகினை நீரலை தடுத்ததும்?



உணர்ச்சிப் பிழம்பான, லட்சியவாத, செவ்வியற் படிமங்களால் நிறைந்த ஒரு கவிதை இது. ச்சாங்ஷா என்கிற இக்கவிதை மாவோ ஒரு கவிஞராக உருவெடுத்த தொடக்க காலத்தினுடைய வெளிப்பாடு. தன் வாழ்வின் முப்பதுகளின் தொடக்கத்தில், பல்கலைக்கழக ஆண்டுகளைக் கடந்தபின், 1925 இல் இதை எழுதினார் மாவோ. தென்-மத்திய சீனப் பகுதியிலுள்ள ஹூனான் மாகாணத்தின் தலைநகரமான ச்சாங்ஷாவில் இருந்தபோதுதான் மாவோ ஒரு கம்யூனிஸ்ட்டாக ஆனார்.

சீனாவைப் பற்றி டிராகன் என்கிற நூலை நான் எழுதிக்கொண்டிருந்த 2007-08 ஆண்டுகளில் அவரது கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்தேன். மாவோவின் கவிதை பாரம்பரிய சீன மரபு கவிதை மரபைப் பின்பற்றியது. அவரது கவிதைகளில் சிலவற்றை சீனமொழியிலிருந்தே மொழிபெயர்க்கவேண்டும் என்பது என் சாகச இலக்குகளில் ஒன்று. ச்சாங்ஷா சீன மரபுக் கவிதைத் தன்மையை உடையது என்பதால், யாப்பில் இல்லையென்றாலும் சொற்களில் முடிந்தவரை மூலப் பிரதியை தமிழில் நகலெடுக்கவேண்டும் என்று விரும்பினேன். ஐந்தாறு கவிதைகளை இதுவரை முடித்திருக்கிறேன். இந்தக் கவிதை மொழிபெயர்ப்புகளை நவீனமும் செவ்விலக்கியத் தொனியும் கலந்ததாகவே என்னால் மொழிபெயர்க்கமுடிந்தது.

சீனமொழியில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் புணர்ச்சி விதிகளில் சிக்குண்டு விகாரங்கள் பல அடைந்து பல்வேறு அவதாரங்களை எடுப்பதில்லை. செங்கற்களை அடு்க்கியதுபோல தனித்தனியா நின்றும் ஒரு அமைப்பின் பகுதியாக முழுமையாக நின்றும் சீனச்சொற்கள் காட்சியளிக்கின்றன. சீனக் கவிதைகளை நாம் படிக்க மட்டும் செய்தால், அது அவற்றுக்குத் செய்யும் பெரிய துரோகம். அவற்றைப் "பார்க்கவும் செய்யவேண்டும்". அதாவது சீன சித்திர எழுத்துகளில் அந்த கவிதையைப் "பார்க்கவேண்டும்", அந்தச் சொற்களை பிரித்து மேயவேண்டும். அப்போது ஓர் தனித்துவமான அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தைப் பெறுவதற்காகத்தான் மூலமொழியிலிருந்து அதை மொழிபெயர்க்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு உருவானது. இதை ஒரு சீனமொழி மாணவனாகவே நான் மொழிபெயர்த்தேன்.

சீனக் கவிஞர்கள் நிஜமாகவே கவிதையை "வரைபவர்கள்தான்". மாவோ மிகவும் தேர்ச்சியடைந்த
ஓர் எழுத்தோவியக் கலைஞரும்கூட (calligraphist).
இந்தக் கவிதையை முதலில் நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்திருக்கிறேன். (தமிழில் எஸ்.வி.ராஜதுரை மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்).

இந்தக் கவிதையை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து, பிறகு அதை தமிழில் மொழிபெயர்த்தால், ஒரு நவீன தமிழ் கவிதை அல்லது புதுக்கவிதை கிடைக்கலாம். ஆங்கிலத்தில் வாக்கிய அமைப்பு ஒரு குறிப்பிட்ட தொடரமைப்பாக உறைந்திருக்கும். சொற்கள் அவ்வற்றின் இ்டத்தைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு நிற்கும். அதைத் தமிழில் கொண்டுவரும்போது நவீன கவிதை ஒன்றும் வாய்க்கும்.

ஆனால் சொற்களுக்கு இடையிலான வெளியை நிரப்ப முயலாத சீனமொழியின் வாக்கியத் தன்மையை நாம் இழந்துவிடுவோம். சீனக் கவிதைகளின் முழு ஆத்மாவை நாம் ஆங்கிலத்தினூடாக மொழிபெயர்க்கையில் தரிசிக்கமுடியவில்லை. அதுதான் பிரச்சினை. தாவோ த ச்சிங், தாங் வம்ச கவிதைகள், மாவோ கவிதைகள் என சீனமொழியின் மூலத்திலிருந்து மொழிபெயர்க்கும் தருணங்களில் இந்த வித்தியாசத்தை என்னால் நன்றாக உணரமுடிந்தது. ஆனாலும் தமிழிலும் நாம் சில தவிர்க்கவியலாத மாற்றங்களைச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. நாம் மாவோவை ஒரு பாரதிதாசனில் அல்லது செம்மலர் கவிஞனிடத்தில் உறைய வைத்துவிடக்கூடும்.

ச்சாங்ஷா என்கிற இந்தக் கவிதை மாவோவின் முதல் கவிதையாகவே பெரும்பாலான நூல்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்றும் ச்சாங்ஷா நகரின் பெருமைகளில் ஒன்றாக இந்த கவிதை இருக்கிறது. அங்கேயுள்ள இளம் மாவோவின் பெருஞ்சிற்பம் ஒன்று பயணிகளை மயக்குகிறது. இந்த கவிதையில் ஓர் இளம் வயதுக்கே உரிய லட்சியவாத நோக்கில் வெளிப்படுகிறார் மாவோ. உயர்நிலைப் பள்ளி அல்லது இளநிலைக் கல்லூரி காலங்களில் போராட்டங்களில் இறங்கிய அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு இந்தக் கவிதை அவர்களது கடந்தகாலத்தை மீட்டுத்தரக்கூடியது.

1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டவீரர்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இக்கவிதை நமக்கும் பொருந்துவதாக இருக்கிறது. 2013 மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்ட இளைஞர்களைப் பார்க்கையில் இது மனத்தில் புதிய எழுத்தோவியமாக எழுகிறது. அப்படி ஒரு கடந்தகாலம் எனக்கும் இருந்தது. எந்தக் காலத்திலும் போராடும் இளைய தலைமுறைக்கு இந்த கவிதை ஓர் அற்புதம். ஒரு மாஜிக். இந்த கவிதையின் மொழிபெயர்ப்பை இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராளிகளின் அந்த லட்சியவாத பருவத்துக்கு காணிக்கையாக்குகிறேன்.

-செ.ச. செந்தில் நாதன் -

எழுதியவர் : செ.ச. செந்தில் நாதன் (28-Dec-14, 7:46 am)
பார்வை : 986

மேலே