நித்யாவின் புத்தாண்டு உறுதி மொழி
காதை பிளக்கும் பட்டாசு ஓசையில் பொழுது விடிந்தது நித்யாவிற்கு .
“என்ன இது... புதுவருடம் என்றால் இதெல்லாம் அவசியம் தானா…? ” சலித்துகொண்டாள்.
காலை கடன்களை முடித்து தலை குளித்து கடவுளோடு சித்தியையும் வணங்கினாள்.
நண்பர்கள் அயலவர்களுக்கு வாழ்த்துக்கள் பரிமாறி அலுவலகம் செல்ல தயாரானாள்.
அதே நேரத்தில் தோழி சுமதி தொலைபேசியில் அழைத்தாள்.
புத்தாண்டு வாழ்த்து பரிமாறலின் பின்
“அலுவலகத்தில் இன்று பெரிதாக வேலை இல்லைடி... வெளிய எங்க சரி போகலாமா?” என்றாள் சுமதி
“இல்லடி கோயில் போகணும்” என்றாள் நித்யா
“அது சரி நீ தான் குட்டி சாமியார் ஆச்சே…” என்று கிண்டலடித்தாள் சுமதி .
“சரி சரி... இப்ப வை. அலுவலகத்தில சந்திப்போம்” தொலை பேசியை துண்டித்தாள் நித்யா .
நித்யா வீதியில் இறங்கவும் அவளது அலுவலக வாகனம் வரவும் சரியாக இருந்தது. வீதியின் இருமருங்கிலும் ஏதோ ஒருவித ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன நித்யா… புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறாய்டி?” - சுமதி
“இவங்களுக்கு இண்டைக்கும் லீவு இல்லையாடி… அவங்களுக்கென்று சந்தோசம், குடும்பம், வாழ்க்கை எதுவும் இல்லையா…? பாவம்ல….” வீதியெங்கும் பட்டாசு வெடிகளாக காசை காகித துண்டுகளாக பரப்பி இருந்தவற்றை கூட்டி துப்பரவு செய்துகொண்டிருந்தவர்களை காட்டி கூறினாள்.
“அம்மா ராசாத்தி... இன்டைக்கு நல்ல நாளும் அதுவுமா சண்டை பிடிக்க வேண்டாம்டி... கொஞ்ச நேரம் பேசாமல் வா...” - கெஞ்சிக் கொண்டாள் சுமதி
அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு நேரத்தோடு வீடு திரும்பினாள்.
அனைவரும் கேளிக்கை கொண்டாட்டங்களில் நாளை வீணடித்துக்கொண்டிருந்தார்கள்.
நித்யாவிற்கு இருப்புக்கொள்ளவில்லை
ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவளுக்கு கண் முன் தோன்றி மறைந்தது கருணை இல்லம் .
சித்தியிடம் அனுமதி பெற்ற பின் தோழிகளுக்கு அழைப்பு விடுத்தாள்.
யாரும் கருணை இல்லம் செல்ல விரும்பவில்லை .
நித்யா யாரையும் வற்புறுத்தவிரும்பவிலிலை.
தனியாக புறப்பட்டாள்
முடிந்த அளவிற்கு இனிப்புகளை வாங்கிக்கொண்டாள் .
கருணை இல்ல காவலாளி ஏற்கனவே நித்யாவை அறிந்திருந்ததால் புத்தாண்டு வாழ்த்து சொல்லி வரவேற்றார் .“என்ன நித்யா தனியாகவா வந்தாய் .?”
“ஓம் அண்ணா... இங்க வந்தும் நிறைய நாளாகிட்டு அது தான்... சிஸ்டர் இருக்கிறாங்களா அண்ணா ”
“ஓமோம்... உள்ளே தான் இருக்காங்க.... ” என்றார் காவலாளி .
உள்ளே சென்றதும் இன்முகம் காட்டி வரவேற்றாள் சிஸ்டர் தீபிகா .
இவர் சுமார் 15 வருடங்கலாக இந்த கருணை இல்லத்தை நடத்தி வருகிறார் .
இறைவன் மனித உருவில் வந்தால் சில நேரம் இவரை போல தான் வருவான் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள் நித்யா. அன்பின் முழு வடிவம் தான் சிஸ்டர் தீபிகா.
“என்ன நித்யா... எப்படி இருக்கிறாய்? வேலைப் பளு அதிகமா? கொஞ்ச நாளாக இந்த பக்கம் ஆளையே காணோம்” சிஸ்டரின் கேள்விக்கு
“நல்ல சுகம் சிஸ்டர். கொஞச நாளாக வேலைப் பளு கூடத் தான் சிஸ்டர். மன்னித்து விடுங்க... வருட கடைசி தானே. விடுமுறை கிடைக்கவே இல்லை” என்றாள் பணிவாக .
நித்யாவே தொடர்ந்தாள் “எங்க சிஸ்டர் செல்லங்கள் எல்லாம்.?”
“எல்லோரும் சாப்பிடுறாங்க.... வா போகலாம்” என்று அழைத்து சென்றாள்.
மதிய உணவை முடித்துக் கொண்ட சிறுவர்கள் எல்லோரும் பட்டம்பூசிகளாக நித்யாவை சுற்றிக் கொண்டனர்.
புது முகங்களுக்கு பழைய முகங்கள் நித்யாவை அறிமுகம் செய்து வைத்தது .
“இவங்க நித்யா அக்கா... சாக்லேட் தருவாங்க...வணக்கம் சொல்லு” என்று மழலை மொழியில் அதிசயப்பட வைக்கும் அறிமுகங்கள் .
பிஞ்சுகளோடு பஞ்சாகி காற்றிலே பறந்தாள் நித்யா ..
“அக்கா... கண்ணன் உங்களோட கோவமாம்" கீதாவின் குரலில் அதிர்ந்தாள் நித்யா .
“எங்க கீதா கண்ணன் ?” தேடினாள் .
“அதோ அங்க நிக்கிறான்” கீதா காட்டிய திசையை நோக்கினாள்
அங்கே கலங்கிய கண்களோடு வெறும் 5 வயது மட்டுமே நிரம்பிய கண்ணன்.
அருகில் சென்றவள் ஆறுதலாய் அவன் தலையை தடவினாள்
“என்னாச்சி என் கண்ணனுக்கு...? ஏன் அக்கா கூட கோவம்...? இந்தா சாக்லேட் சாப்பிடு” என்றாள்.
“எனக்கு சாக்லேட் வேணாம்... அம்மா தான் வேணும்” - அழுது கொண்டே கண்ணன் கூறியதும் நித்யா அவனை அள்ளி அணைத்துக்கொண்டாள் .
“நிச்சயம் அம்மா வருவாங்க... அழாத செல்லம் அழாதடா...”
குழந்தையோடு குழந்தையாக குமுறி அழுதாள் நித்யா .
எப்படி சொல்வாள் ’உன் அம்மா உயிரோடு இல்லை’ என்று
இருவரையும் ஆறுதல் படுத்த சிஸ்டரும் வந்தாள்.
“என்ன நித்யா நீயும் சின்ன பிள்ளை போல... ” என்று தேற்றினாள்.
“இத பாரும்மா நித்யா... கண்ணனுக்கு ரெண்டு கண்களும் தெரியாதுமா... அதனால யாரும் தத்து எடுக்கவும் முன்வருகிறாங்க இல்லை. அம்மா வேணும்... அம்மா வேணும்... என்று ஒரே அடம் பிடிக்கின்றான். என்னமா பண்ண இது தானே வாழ்க்கை. கொஞ்ச நாள் போனதும் அவனே புரிந்து கொள்வான். நீ சும்மா கவலை படாத. ஆண்டவன் அனைவரையும் ரட்சிப்பான்.” சிஸ்டர்
ஆறுதலுக்காக சொன்ன வார்த்தைகள் ஆழமாக பதிந்தது நித்யாவின் மனதில்.
கனத்த மனதுடன் கருணை இல்லம் விட்டு வீடு திரும்பும் போது உறுதியாய் முடிவெடுத்தாள்
’திருமணத்தின் பின் ஆசைக்காய் ஒன்றை பெத்துக்கொண்டு அன்புக்காக எங்கும் இரு குழந்தையை தத்து எடுப்பதென்று’
முற்றும்