காதலராகவே வாழ்ந்திடுவோம்

மதியே
சுடரே
மலர் வனமே
ஓய்வெடுங்கள் யாவரும்
உவமையாகத் தேவையில்லை அவளுக்கு - என்
உணர்வுகளைத் தின்று வாழும் யுவதிக்கு!.

மேகத்தின் மேலடுக்கில்
வேர்கள் விடப் பார்க்குமென் காதலுக்கு
விரல் கொடுத்து உதவுகிறாள்
தலை கோதி சிரிக்கிறாள்

அவள் தலையணையில்
மீசை முளைத்து
கன்னம் குததுகிறதாம்!
கதை சொல்கிறாள்...

தெரு நாய்களை
என் பெயரிட்டு அழைத்துவிட்டு
ஏளனமாய் சிரிக்கிறாள்

விரலோடு விரல் பிணைத்து – குருதி
வேகத்தை கூட்டி விட்டு
‘சும்மா’ வென்று சொல்லிப் போகிறாள் – என்
எல்லைக்கோடு கிள்ளிப் பார்க்கிறாள்

கடற்கரையில்
அவ்வளவு இடமிருந்தாலும்
மணலில் எழுதிய என் பெயரை
அழிப்பதில் தான்
அத்தனை சுகம் அவளுக்கு
அழிக்கப்படுமென்று தெரிந்தே எழுதுகிறேன்
அதின் சுகம்
அப்பாகளுக்குத் தான் தெரியும்

என் சூத்திரங்கள் பலிக்காமல்
பெற்றுக்கொண்ட கெட்ட வார்த்தைகள்
என் குமட்டில் குத்தி சொல்லிப் போனது
மானஸ்தனை காணவில்லையென்று!..

அவள் கூந்தலுக்காக
தினமும் பிரார்த்திக்கிறேன்
அவள் சிணுங்கல்களால் தேய்மானம்
எனக்கு அதிகமாக இருப்பதால்!

சிகை அலங்காரம் செய்ய
சிந்தாமல் சாப்பிட
புகைப்படங்களில் சிரிக்க
எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க முனைகிறாள்
நான் குழந்தையாகி விட்டேனா?
இல்லையவள் தாயாகிவிட் டாளா?

காசு பணம் சாதியாவும் - என்
கனவில் வந்து முறைக்கிறதே
காதல் மட்டும் வாழப் போதும்
என்ற தேசம் தேடிபோவோம்
காதல் மீது காதல் விதைத்து
காதலராகவே வாழ்ந்திடுவோம்!

எழுதியவர் : செல்வா பாரதி (5-Jan-15, 5:17 pm)
பார்வை : 87

மேலே