இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதை போட்டி 2015

இப்படி நாம் காதலிப்போம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புருவத்தின் புன்னகையே புதையலென - ஆவலின்
அடித்தள அன்போடு அழகியல் மலராவோம்
புரிதலின் பக்குவமே அமிர்தமென - அசைத்தாலும்
பிரியாதப் பிம்பத்தின் நிலையான நிழலாவோம்


திறனின் திரட்டலே தென்றலென - சிதையாத
கனவின் கணுக்களைச் செதுக்கும் சிற்பியாவோம்
வார்த்தை வடிவமே வசந்தமென - வாழ்வில்
வசீகர வண்ணம் தெளித்த சித்திரமாவோம்


விழிப்புணர்வை விதைத்தலே விடியலென - பகிரும்
பயணத்தின் பாதையில் அற்புதச் சுடராவோம்
சந்திப்பின் சரிபாதி சேவையென - யாருமிலா
சிறுவரின் நரம்பிலும் நம்பிக்கை நகலாவோம்


ஆடம்பர வாழ்வே அசிங்கமென - என்றும்
எளிமை வானில் பால்வண்ண பறவையாவோம்
மனிதத்தின் மறுபிறவிக் காதலென - எங்கும்
வறுமை ஒழிக்கும் ஆதரவின் அர்த்தமாவோம்


பெற்றோரின் சம்மதமே இறுதியென - மனதின்
விருப்பம் விளக்கிய விசித்திரப் புதிராவோம்
உள்மனதின் உருவமே உறுதியென - நினைவின்
நித்திரைக் கடத்திய ஆன்மாவின் அடர்த்தியாவோம்


சாதி மதத்தால் சிதைத்தாலும் - உயிரின்
உயரிய துளிக்குள் உலவும் உணர்வாவோம்
விதியின் சதியால் பிரிந்தாலும் - தமிழின்
தேன்மொழி கவிக்குள் காதல் காவியமாவோம்


- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (6-Jan-15, 6:28 pm)
பார்வை : 222

மேலே