குருதிக்காவியம்
குருதிக்காவியம் !
காதலி பேச மறுத்த கணங்களில்
கையில் கத்தியால் கீறிக் கீறி
செங்குருதியில் வரைந்துகொண்ட
வரிக் குதிரை நான் !
மண்ணீரலில் உருவாகி
மண்ணாகிப் போகும் முன்
மனிதனின் ஒவ்வொரு தானமும்
குருதிக்காவியம் படைக்கும் என்பதை
மறந்து போனேன் சில காலம் !
பாலும் தேனும் பழமும்
பருகிச் சுவைத்து உண்டு
ஊறிய உதிரமதை
கொசு கொஞ்சம் சுவைக்க
அட்டை கொஞ்சம் உறிஞ்ச
அடிதடிகள் கொஞ்சம் சிந்துவிக்க ....
யார் யாரோ என் இரத்தம் குடிக்க…
யார் பெற்ற மகளோ மருத்துவமனையில் ...
கொஞ்சம் அவளும் உண்டு உயிர்பெறட்டும்
என் சிவப்பு அமிழ்தத்தை !
தாய்ப்பால் வெள்ளை
குருதி - சிவப்புத் தாய்ப்பால் !
தாயாகிப் போன பெருமிதத்தில் - கொடுத்த இரத்தம்
உடனே ஊறிற்று உள்ளத்தில் அவனுக்கு !
இறைக்க இறைக்க ஊரும்
உதிரஊருணி - குருதிக் கிணறு !
குருதியை பக்தனுக்கு காணிக்கையாக்கி
நானும் கடவுளாகிப்போகிறேன் !