இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதை போட்டி 2015”

மணலாலே வீடெடுத்து மரவள்ளி கிழங்கெடுத்து
....தினைமாவுத் தேனெடுத்து திமிர்கொண்ட ஓடையோரம்
தமிழ்சார்ந்த சொல்லெடுத்து தாளத்தின் வேரெடுத்து
....சுரமோடு நீபாட சுருதிக்குள் நானோட ...

கண்ணாளால் விழிபார்க்க காளைமனம்உள்வேர்க்க
....புண்ணான நெஞ்சத்தை புனர்செய்யும் உன்பார்வை
உன்னாலே காதல்எழ பேரச்சம் என்னுள்விழ
....தினம்நூறு கவிதோன்றும் திரவியமும் நீயானால் ...

பனிமூளும் தேசத்தில் பார்வைகளின் படுசூட்டில்
....பகலவனின் ஒளிக்கீடாய் பாயாதோ வெப்பங்கள்
காற்றுபுகா தேசத்தில் காதல்மட்டும் சுமந்துசென்று
....காலனையே காவல்வைத்து காவியங்கள் படைத்திடுவோம்...

மேகத்தின் மீதமர்ந்து மின்னல்களின் ஒளிகுடித்து
....சோகத்தை நாம்மறப்போம் ஜோதிக்குள் குடிபுகுவோம்
புதுவுலகில் நாம்நுழைவோம் புதுவுயிராய் தினம்மலர்வோம்
....புரிதலான காதலாலே புதுமைகளை விதைத்திடுவோம் ...

ஆவிவிட்டுப் போனாலும் அன்புவிட்டுப் போகாது
....பாவிமனம் நோகாத பக்குவங்கள் தந்துவிடு
கூடுவிட்டு கூடுபாய்ந்து குருவிபோல பறவையாகி
....நாடுவிட்டு நாம்பறப்போம் நானிலமும் கலந்துநிற்போம்...

உடல்சூடு ஏற்றுகின்ற காமத்தின் காதல்விட்டு
....மனச்சூடு போற்றுகின்ற மறுகாதல் நாம்செய்வோம்
நூறகவைத் தொட்டாலும் வீழாது நாமெழுவொம்
....நூறாண்டு யுகம்தாண்டி நூதனமாய் புதுக்காதல்செய்வோம்...
--------------------------------------------------------------------------------------------------------
இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதியளிக்கிறேன்

முகவரி
குமரேசன் கிருஷ்ணன்,
97,சங்குபுரம் 6 ம் தெரு ,
சங்கரன்கோவில் - 627756
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு

அலைபேசி -90429 96431

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (10-Jan-15, 9:33 am)
பார்வை : 455

மேலே