கொஞ்சம் கொஞ்சமாய் நிறைய கேள்விகள் - 3 - மகிழினி
"குறைவாய் பேசு அதிகம் கேள் " என்பது எனக்கு தெரிந்த சிறப்பான பொன்மொழி ... ஆனால் அதில் ஒரு சந்தேகம் , அதிகம் கேள் என்பது காதில் கேட்பதை உணர்த்துகிறதா இல்லை வாயால் அதிகம் கேள்வி கேட்டு குடைந்துவிடு என்று உணர்த்துகிறதா ! தெரியவில்லை ........
இரண்டாம் கூற்றையே உண்மையாக எடுத்துக் கொள்வோமே ..... நிறைய தேடல்கள் அனைத்தும் கேள்வியாலே தொங்கிவைக்கப்படுகிறது.... கேள்விகள் இல்லை என்றால் பதில்கள் இல்லை , பதில்களை தேடி தொடங்கும் பயணங்களும் இல்லை .... பயணங்கள் தந்த வரலாறுகளும் இல்லை. மொத்தத்தில் கேள்விகள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை .......
இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் மட்டும் சுமார் இரண்டு நூற்றாண்டுகள் நீடித்து ஒரு வழியாக அகிம்சை என்ற பெயரில் இம்மிசித்தே பெற்றுவிட்டோம் .............என் கேள்விகள் நிச்சயம் சுதந்திரம் பற்றியல்ல..... வரலாற்றில் சமாதிகளை சீர்படுத்தி நெறிபடுத்தவும் முயற்சிக்கவில்லை .......
போராட்டங்கள் இன்றைய கால கட்டத்தில் நாம் தினம் தினம் அனுபவப்பட்டு கற்றுக்கொள்ளும் பாடங்கள் போல மாறிவிட்டன .......
இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் நடக்கும் அனைத்துவித போராட்டங்களுக்கும் முடிவுகள் உடனே கிடைத்துவிடுகிறதா ? (இக்கட்டுரையில் முத்தப்போரட்டம் தடை செய்யப்பட்டுள்ளது)........ அன்றைய இந்தியா ஒரு முழுமையான இந்தியாவாக மாற நமக்கு சுமார் 200 ஆண்டுகள் தேவைப்பட்டன.. குறிப்பிட்ட அக்காலக்கட்டத்தில் நாம் இழந்தவைகள் மிக அதிகம்... மக்கள் முதற்கொண்டு செல்வம், பெயர் மற்றும் கடைசியாக தன்மானமும் தான்....
பஞ்சாபில் ரௌலட் சட்டத்திற்கு எதிரான சத்தியாகிரகமும் , அதன் பின்னாட்களில் ஒத்துழையாமை இயக்கம் , உப்பு சத்தியாகிரக போராட்டம் , கீழ்படியாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு என்று அது இது என அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன .. தனக்கு தேவையான தனி மனித உரிமையை பெறுவதும் கூட போராட்டத்தின் வழியில் தான் சாத்தியமாகிறது.....
நியாயத்திற்காக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்திற்கும் நல்ல முடிவுகள் கிடைத்திருக்கிறதா?
"ஐரோம் சானு ஷர்மிளா " கொஞ்சம் பெரிய பெயர் தான்.. அதிகப்படியான எழுத்து மக்கள் இவரைப்பற்றி அறிந்து இருப்பீர்கள் ....... கிட்டத்தட்ட 14 வருடங்கள் முழுமை பெற்றுவிட்டன இவரின் போராட்டம் தொடங்கி ... ஆனால் போராட்டத்திற்கான முடிவு எப்பொழுதும் போல கேள்விக்குறிதான்..... ம்ம்ம்
இவரும் ஒரு வகையில் ரௌலட் போன்ற ஒரு சட்டத்தை எதிர்த்து தான் போராடுகிறார்.... AFSPA எனப்படும் (Armed Force Special Power Act) ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958 இல் இந்திய அரசவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் இந்திய ராணுவ வீரர்களுக்கு பெரிதும் ஆனந்தம் தரக்கூடிய சட்டமும் கூட... இச்சட்டத்தின் மூலம் ஆயுதப்படையினருக்கு எவரையும் கைது செய்யவும் சோதனை செய்யவும் குழப்பம் மீறியநிலைநில் சுடவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சட்டம் எத்தனையோ அப்பாவி மக்களின் உயிரை பலிவாங்கியது ..... அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் 1990 வரை இருந்த சட்டம் 90 களின் பிற்பாதியில் காஷ்மீர் வரை கொண்டு செல்லப்பட்டது... பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் ஆயுத பிரிவு தான் அங்கே குழப்பமான சூழலை ஏற்படுத்தி கொலை ,கற்பழிப்பு போன்ற சில கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன... இந்த சட்டத்தை நீக்க போராடிவரும் ஷர்மிளா வருடத்திற்கு ஒருமுறை விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார் ஐரோம் ...... உணவு நீர் என்பதையெல்லாம் மறந்து மீண்டும் ஒரு சுதந்திரத்திற்காக போராடுகிறார்.......
அவரின் சமூகத்தை சேர்ந்த மக்கள் துன்பப்படும் போது அவர் அவர்களின் நன்மைக்காக போராடுகிறார் ஆனால் இது நமக்கு வெறும் செய்தி தான் ...... இங்கே வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்றும் நாம் அனைவரும் சகோதர சகோதிரிகள் என்று போலியாக கோசம் செய்வது யாரை ஏமாற்ற ?
அதே மணிப்பூர் மாநிலத்தில் மனோரமா என்ற பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார் நம் நாட்டின் ஆயுத படை பிரிவினரால் .. நாம் என்ன செய்தோம் ?
எப்பொழுதும் போல வேடிக்கை தான் .... இதே AFSPA சட்டத்தை காரணம் காட்டி தப்பித்துக்கொண்டனர் ...
சட்டங்கள் என்பதெல்லாம் வறியவர்கள் மற்றும் ஏழைகள் பின் தொடர்வதற்காக வகிக்கப்பட்டதா ?
அப்பெண் கொலை செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின் அப்பெண்ணின் தாய் மற்றும் மற்றும் ஒரு முப்பது பெண்கள் "Indian Army Rape Us" என்று கங்லா நுழைவாயிலின் முன்பு நிர்வாண போராட்டத்தில் இறங்கி நாட்டின் உயர் திரு மானத்தை விலைக்கு எத்தனை என்று பேரமே பேசிவிட்டார்கள்......
இந்த போராட்டத்திற்கும் இன்று வரை முடிவு என்பது கிட்டவே இல்லை....
இழப்பு என்பது ஈடு செய்ய இயலாதா ஒன்று அப்பெண் இறந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன ...
நீதி மட்டும் தரசு தட்டில் பணத்துடன் ஏற்ற இறக்கம் பார்க்காமல் வஞ்சித்துவருகிறது... அதே முப்பது பெண்மணிகள் இன்று கூட்டாக இணைத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்கள் ......
மக்களால் மக்களுக்காக இயற்றப்படும் சட்டமே மக்களாட்சி எனப்படும் .... இரண்டு மதிப்பெண் வினாவிற்கான விடை....... மக்களே எதிர்த்து போராடும் அளவிற்கு ஒரு சட்டம் இயற்றப்படுமானால் இங்கே நடப்பது மக்களாட்சி தானா ?
இல்லை இதே இந்தியாவில் உயர்ந்த குடி மக்களுக்காக மட்டும் தானா சட்டங்கள் உள்ளனவா ?
இப்படியெல்லாம் நடக்கும் என்று யோசித்துதான் பாரதி ரௌத்திரம் பழக சொன்னானோ என்னவோ?
மீண்டும் பேசுவோம் .....
மகிழினி