இப்படி நாம் காதலிப்போம்- பொங்கல் கவிதைப் போட்டி-2015

இப்படி நாம் காதலிப்போம்- பொங்கல் கவிதைப் போட்டி-2015
1. உள்ளத்(து) எழுதிவைத்த ஓவியக் கவிதையைப்போல்
2. கள்ளம் திருத்திய காவியக் காதல்செய்!
3. சந்தக் கவிமணிகள் சாற்றும் தமிழ்க்கவிதை
4. சிந்தை மகிழ்விக்கும் செயல்போல் காதல்செய்!
5. வையம் புகழ்ஞானி வள்ளுவனின் முப்பாலில்
6. பெய்த நயம்போலும் பிழையில் காதல்செய்!
7. இம்மை மறுமை இரண்டுமே பயனுறத்
8. தம்மை இழந்த தவம்போலும் காதல்செய்!
9. தொன்மை நூல்நயங்கள் துருவி,ஆய்ந் திடுவாரின்
10. உம்மைப் பலர்பேசி உவக்குமொரு காதல்செய்!
11. பொய்மை இழந்தசொல், புகழை நினைத்தசெயல்
12. அய்யம் கடந்த நடை ஆகிவரும் காதல்செய்!
13. சாதி கடந்தனிலை சாயம் துடைத்தமதம்
14. நீதி நிலைத்தமனம் நிற்பதுபோல் காதல்செய்!
15. ஆதி முதலின்றும் அன்பே கடவுளென
16. ஓதி வரும்பொருளின் உண்மைவழிக் காதல்செய்!
17. ஆரியம் தமிழென்ற ஆணவங்கள் பேசாமல்
18. யாரையும் கேளென்றான் பேரனெனக் காதல்செய்!
19. அயனோ பிறனோ அழகிய உலகளித்தான்
20. பயனைப் பலர்க்களித்துப் பகிர்ந்துண்ணும் காதல்செய்!
21. இந்திர சாலங்கள் ஏதுமிலை காதலே
22. மந்திர வாழ்வென்று மண்ணுணரக் காதல்செய்!
23. பண்டைத் தமிழ்மொழியைப் படித்துணரும் பக்குவத்தில்
24. அண்டை அயலார்கள் அன்புணரக் காதல்செய்!
==
இந்த படைப்பு என்னால் படைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துறேன்.

எசேக்கியல் காளியப்பன்

வயது – 71
(வயது எதற்கு? முதியோர் சலுகை ஒன்றும் அறிவிக்கப்படவில்லையே!)

உறைவிடம் -
மனை எண்:7, சிறீ பார்சுவ நாத் அவென்யூ
மாடம்பாக்கம்,
சென்னை -600126

தொலைபேசி இலக்கம். 9840115227

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (13-Jan-15, 10:55 am)
பார்வை : 179

மேலே