+முரசு கொட்டட்டும் தமிழரின் பெருமை இமயம் எட்டட்டும்+
புறப்படு தமிழா புதுயுகம் படைக்க
இதுவரை இழந்தது போதுமடா!
செயல்படு தமிழா செங்கடல் வெளுக்க
எதுவரை பொறுமை பொங்கிடடா!
சொந்தங்கள் இழந்தோம் கண்களின் முன்னே
சிந்திய ரத்தங்கள் கணக்கில்லையே!
பந்தமாய் இருந்தும் பார்த்துக் கொண்டிருந்தோம்
தமிழனே மானமும் உனக்கில்லையோ!
ஒன்றாய் சேர்ந்தால் வெற்றியும் நமதே
இன்றே சேர்வோம் வந்திடுநீ!
நன்றாய் செய்தால் தமிழர் நமக்கே
நன்மை என்பதை உணர்ந்திடுநீ!
கரங்களை உரங்களாய் மாற்றிக் கொண்டு
கருத்தாய் கவிமலர் வளர்த்துவிடு!
இருதயம் முழுதிலும் அன்பு கொண்டு
இருந்தே புவிதனில் ஒன்றுபடு!
இத்தனை காலம் வாழ்ந்திடும் தமிழ்போல்
நமது ஒற்றுமை வாழ்ந்திடட்டும்!
எத்தனை சக்திகள் எதிர்க்க வந்தாலும்
துணிந்திட பயந்தே ஓடிடட்டும்!
இதயத்தால் இணைவோம் வேற்றுமை களைந்தே
இணைந்திட வெற்றியும் நம்மைஎட்டும்!
இமயத்தை அடைவோம் ஒற்றுமை காத்தே
இணைந்தே ஜெயித்திட முரசுகொட்டும்!