திறமை = முயற்சி + மூச்சு

அன்பு நண்பர்களுக்கு ,

பொதுவாக நான் தொலைகாட்சி காண்பதென்பது அரிது.. நேற்றைய தருணத்தில் எதார்த்தமாக விஜய் தொலைகாட்சியை நான் கண்டு நெகிழ்ந்த அந்த 9 வயது சிறுமியின் உணர்வுபூர்வமான பறையை பற்றிய பாடல் .. அப்பப்பா..! என்னை உணர்சிக்கடலில் மூழ்கடித்த வலி இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.. வாழ்க்கையில் வெற்றியடையவேண்டும் என்ற வலியையுடையவர் அனைவருக்கும் அது புரியும்.. பாடலின் வரிகளை இந்த வயதில் ஒரு குழந்தை ஈர்த்து உள்வாங்கி உணர்வுகளை வெளிபடுத்துகிறதென்றால் இதைவிட தமிழுக்கு ஒரு சிறப்பு இந்த காலத்தில் எதை குறிப்பிடமுடியும்..? இதோ என் வரிகளில் அந்த குழந்தைக்கு பாராட்டுகள் என்னை பார்த்த அந்த உருவின் திறமையில் கலந்த ஏக்கங்கள்..!

அந்த பாடலை காணத் தவறியிருந்தால் நீங்கள் விஜய் தொலைகாட்சியின் 23.01.2015 அன்று ஒளிபரப்பிய "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியில் "அனுஷ்யா" பாடலை கேட்டுப் பாருங்கள்.. உணர்வுகள் மொத்தம் ஒருசேரத் துடிக்கும்..! முடிந்தால் உங்கள் வாக்குகளை அந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமிக்கு வாக்களியுங்கள்.. Anushya SSJ08

கருவினிலே வலித்தது
காணொளியில் ஒலித்தது
நிலமுட்டும் விதையொன்று
நெஞ்சுக்குள் முளைத்தது..

அறியாத வொருபருவம்
அழவைத்து பார்த்துவிட
அயராத அவளுழைப்பால்
அரங்கமே அதிர்ந்தது..!

கல்நெஞ்சை கரைத்துவிட
கண்ணீரை கடல்நீராக்கி
கரைபுறண்டு வரச்செய்தாய்
காண்கின்ற உள்ளத்தில்..!

வயதிற்கும் உணர்வுக்கும்
வார்த்தைக ளில்லையென
இடிதாங்கும் இதயத்துள்
இசையாலே நீபுகுந்தாய்.!

அன்னையின் கண்ணீரும்
அருந்திவிட்ட செந்நீரும்
தமிழ்பாடல் சுவையோடு
தவழுதடி உன்நாவில்..!

தோள்சுமந்த தந்தையவன்
துறந்ததொரு வேலையது
தவறில்லை என்றுரைத்த
தங்கமீனும் நீயன்றோ..!

பறையெனும் பாட்டாலே
பட்டிதொட்டி யெல்லாமே
பட்டுபோகும் கலைக்கொரு
பாலூற்றி விட்டாயே...!

முயற்சிக்கும் மூச்சிற்கும்
முடிச்சுகளை போட்டுவிட
வார்த்தைகளை வுள்வாங்கி
வாழ்ந்துகாட்டி விட்டாயே..!

வறுமையதின் வலிகளது
வலுவிழந்துப் போகாதென
உயிர்வலியின் உச்சமதை
உன்னிடத்தில் கண்டேனே..!

தலைமுறையின் தகராறில்
தடம்புரண்ட யென்திறமை
உன்னுருவில் நான்கண்டேன்
உளமார வாழ்த்துகின்றேன்..!

எல்லையிலா வுன்திறமை
எட்டுதிக்கும் ஒலித்துவிட
எல்லாமல்ல இறைவனவன்
என்றுமுன் துணையிருப்பான்..!

எழுதியவர் : ஜாக் .ஜே .ஜே (24-Jan-15, 11:10 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 405

மேலே