உள்ளூர் கோடாங்கி - Mano Red

ஆடிய நிலையில்
அதிரப் பேசிக் கொண்டிருந்தான்
அவன்...!!
அவன் மேல் யாரோ
அமர்ந்து இயக்குவதாக
அரங்கேற்றினான் நாடகத்தை..!!
கூட்டம் கூட்டமாக
குறைகளை கேட்டபின்
குறி சொல்ல ஆரம்பித்தான்,
வெற்றிலை தடவியும்
வேப்பிலை அடித்தும்
ஆவேச குரல் எழுப்பினான்..!!
வரதட்சணை கொடுமையில்
தாய் வீடு வந்தவளின் கையில்
எலுமிச்சை பழம் திணித்து
தலையணை கீழே வைத்து
தனியே உறங்கச் சொல்லி,
ஐம்பத்து ஒரு ரூபாய்
புடுங்கிக் கொண்டான்...!!
பாட்டியுடன் வந்திருந்தான்
படிப்பு வராத சிறுவன்,
பயத்துடன் நெருங்கியவனை
நெற்றியில் திருநீறு வைத்து
இனி நன்றாக படிப்பான்
போய் வாருங்கள் என்கிறான்
பள்ளிக்கூடம் ஒதுங்காத
உள்ளூர் கோடாங்கி அவன்...!!
பருவப் பெண் அவள் மேல்
கன்னிப்பேய் இறங்கியுள்ளதாம்,
சாட்டை அடித்தும்,
பழுக்கச் சூடு போட்டும்,
விரட்டுகிறானாம்
இருட்டில் நிழல் பார்த்து
பயம் கொள்ளும் அவன்...!!
ஊரும் ஊராரும்
சுகமாய் வாழ
காலில் செருப்பின்றி
உணவின்றி விரதமிருந்து
சாமி ஆடுகிறானாம்,
தினமும் தவறாமல்
சாராயக்கடை தேடும் அவன்..!!