விரட்டியடிக்கப்பட்ட இறைவன்!
இறைவன் நிற்கிறார்!
மனித உள்ளங்களில்
இறைவன் நிற்கிறார்!
கல்லால்
செதுக்கப்பட்ட
சிலைகளில் அல்ல!
பொதுவிநியோகக் கடைகளில்
அரிசி வாங்குவதற்காக
கொட்டும் வெயிலில்
கைக்குழந்தையுடன் நிற்கும்
பெண்களின் பரபரப்பில்
இறைவன் நிற்கிறார்!
படித்து பட்டம் பெற்று
வேலைக்காக
அலுவலகம் தோறும்
வரிசையில் நிற்கும்
இளைஞர்களின் ஏக்கங்களில்
இறைவன் நிற்கிறார்!
வயதாகியும்
வரதட்சணை இல்லாமல்
வரன் வராததால்
விழிபிதிங்கி நிற்கும்
பெண்களின் குமறலில்
இறைவன் நிற்கிறார்!
மருந்துக்கு பணமின்றி
அரசு மருத்துவமனையில்
வரிசையில் நிற்க முடியாமல்
தள்ளாடும் முதியோர்களின்
உடல் சோர்வில்
இறைவன் நிற்கிறார்!
சத்தியத்தில் வாழ்பவன்
வேதத்தை வகுத்து தந்தவன்
எண்ணற்ற ஜீவன்களில்
குடி புகுந்தவன்
உடுக்க இடமின்றி
உண்ண உணவின்றி
எச்சில் துப்பும் இடங்களில்
விழுந்து கிடக்கும்
மனித உள்ளங்களில் வாழ்பவன்
அன்னதானம் வாங்க
கோவில்கள் தோறும்
வரிசையில் நிற்கும்போது
அருவருப்பாக பார்க்கப்பட்டு
கம்பாலே அடித்து
விரட்டியடிக்கப்பட்டு
வெளியே தள்ளப்படுகிறான்!