கண்மணி நீ போதும்
தந்தை கொண்ட தாகத்தாலே
உன் தாயும் கொண்ட பொய் மோகத்தாலே
--தரிசல் காட்டில் மழை போலே
தங்கமே நீ இந்த தரணியிலே அவதரித்தாய்
பெண் பிள்ளை வேண்டியே
பேராசைக் கொண்ட நான்
ஆண்மகன் உன்னை
ஆனந்தமாகவே ஈன்றெடுத்தேன்
கொஞ்சும் உன் வாய்மொழி
கேட்காமலே ஓடிவிட்டான் என்று
எனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லை
என் வயிற்றில் பிறந்த வைர மகுடத்தை
என் தலையில் சூட்டி தலைவியென அறிவித்தால்
தலை வலியா வரப்போகிறது
தலைகனம் தானே கூடிப்போகிறது
மாதராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டுமென்ற
பாரதியின் பாடல் உண்மைதான் போலும்
--மார்பில் உன்னைத் தாங்க மங்கை நான்
மாதவம் தான் செய்திருக்க வேண்டும்
தாலியில் ஏனோ நம்பிக்கை அற்று போனது -நடத்திய
-- தாம்பத்யம் உனக்காகவே என்று உள்ளத்தில் தோனுது
கணவன் கொடுத்த கவலையெல்லாம்
உன் கன்னக் குழியிலேதான் புதைக்கின்றேன்
--நீ முளைத்து எழும் நாளை
பற்றியே முப்பொழுதும் நினைக்கின்றேன்
குடிபோதையில் அடித்து சிதைத்தும்
அடிமையான சீதையாக இருப்பதை விட
--உன் மடிபோதையில் மயங்கி விழும்
பேதையாக இருந்து விட்டுப் போவதை
பெருமையாகவே நினைக்கின்றேன்
காவலன் தேவை இல்லை
--கண்ணால் கற்பழிக்கும்
காதலனும் தேவை இல்லை
--கணவனென்னும் பேரில்
கழுத்தறுக்கும் கள்வர்களும் தேவை இல்லை
கண்மணி நீ போதும்.. ஆம்..
காலம் முழுதும் கண்ணீரின்றி நான்
வாழ கண்மணி நீ மட்டும் போதும்..