லைப்பட்ட டீம்-நகைச்சுவை சிறு கதை

நான் ஒரு பெண் அரசு ஊழியை. ஆறு மணிக்குப் பணி முடிந்து வீட்டுக்குப் போகுமுன் போட்டோ ஸ்டுடியோவுக்குப் போனேன். “பேமிலியோட போட்டோ எடுக்கணும்” என்றேன். “இன்னைக்கு முடியாது, என் பெண்டாட்டி ஊருக்கு போயிட்டாளே” என்றார் ஸ்டுடியோகாரர்.

“என்னோட பேமிலி சார். குழந்தைங்களை கூட்டிட்டு வரேன்”

“ஓ, சரி, குழந்தைங்களை அழ வச்சி கூட்டிட்டு வராதீங்க, முகம் டல்லடிக்குது”- ஏதோ நாங்கள் குழந்தைகளை கொடுமைப் படுத்துவதைப் போல உத்தரவிட்டார் போட்டோகிராபர்.

எனக்குப் பெற்றோர் இல்லை. மாமனார் மாமியார் ஊரில் தறி நெய்கின்றனர். இங்கு வர மறுக்கின்றனர். “கை கால் நல்லா இருக்கும் போது தறி போட்டு நாலு காசு பாக்க வேணாமா? ”

விட்டால் தூங்கி விடுவேன் போல உடம்பு வலி.

“சீக்கிரம் கிளம்புங்க! ஒரு பேமிலி போட்டோ எடுத்து என்லார்ஜ் பண்ணி வீட்டுல மாட்டிடலாம்” என் கணவரிடம் சொல்லிக்கொண்டே பீரோவைத் திறந்தேன். ஐயே ! என்ன இது?

பீரோ லாக்கரில் பார்க்கவே வாந்தி வரும்படியான பிய்ந்து போன பழைய செருப்பு!

தூக்கி கடாசினேன்.

“ என்ன காரியம் பண்ணிட்டே, சீலி? ” என்றார் என் கணவர் பதறியபடி.

அதற்குள் வந்து விட்ட என் ஆறு வயது மகள் பிரபாவும் மூன்று வயது மகன் பிரசாத்தும், “ஏம்மா உனக்கு கொஞ்சமாவது மானர்ஸ் இருக்கா? ஒரு மொபைல் போனை இப்படியா தூக்கிப் போடுவே? ” என்று திட்ட ஆரம்பித்தனர்.

நான் புரியாமல் விழிக்க, என் கணவர் அது சாம்சங், புது மாடல் என்றார். அவரின் சீரியஸான முகத்தைப் பார்த்து ஒருவேளை சாம்சங், புது மாடல் மொபைல் ஃபோன் என் கண்ணுக்குப் பழைய செருப்பாகத் தெரிகிறதோ என்று பயந்து விட்டேன்.

அதற்குள் என் மகள் செருப்பின் பிய்ந்த வாரை கையில் மாட்டிக் கொண்டு லொட் லொட் லொட்டென்று அடிப்பகுதியை சில முறை அழுத்தி “அலோ, நான் பபா பேஷறேன், அங்கிள்தானே பேஸ்றது? ” என்று இல்லாத அங்கிளோடு கலாய்க்க, மகன் சார்ஜரில் இருந்த என் மொபைல் போனை கடாசி விட்டு, சார்ஜரின் வாரை இழுத்து செருப்பின் துளையில் செலுத்தினான்!

“டேய், என் மொபைல்ல சார்ஜே இல்லடா! ” –என் கத்தல் யாருக்கு கேட்கிறது? வேறு சமயமென்றால் ஒரு கடி கடித்திருப்பேன், குழந்தைகள் அழக் கூடாதாமே?

குழந்தைகளை வெது வெது நீரில் குளிக்க வைத்து உடை போட்டு அலங்கரிப்பதற்குள்...

“இந்த சட்டைதான் வேணும், அந்த சட்டை வேணா; என் கவுன அவன் எடுத்துட்டான், அக்கா எம்ம கதாமாதுங்கறா..(எருமை கடா மாடுங்கறா) சிங்கிள் கும்மிடி போடு” போன்ற பலதரப்பட்ட சச்சரவுகள்... சமாதானங்கள்!

இதுகள் நாயும் பூனையுமா அடிச்சுக்குதே என்று நினைத்தேன். கண்ணீர் கன்னத்தில் விழுவதற்குள் கிக்கீ என்று சிரித்தன.

ஆடாமல் ஆடுகிறேன், ஓடாமல் ஓடுகிறேன்? என்று பெண் பாடி டான்ஸ் ஆட, பையன் ரோ ரோ ரோ ய போட் ரைம் சொல்ல ஆரம்பித்தான். மெல்லி மெல்லி மெல்லி மெல்லி மெல்லி...(அடுத்த வரி ஞாபகம் வருகிற வரை கணக்கற்ற மெல்லி மெல்லி போய் கொண்டுதான் இருக்கும்) லைப்பட்ட டீம். (Life is but a dream- தான். அது என் மகன் வாய்க்குள் மணிக்கு அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் வரும்போது இப்படி ஆகி விடும்.)

நான் வீட்டை பூட்ட, பைக்கை ஸ்டார்ட் செய்தார் அவர். பைக் மேல் மகள்.

“ சீலி, சீலி, சீக்கிரம் வா...” கணவர் பரபரக்க, தெருப் பெண்கள் களுக்கென்று சிரித்தது கேட்டது.

வேகமாக ஓடினேன். ஒரு கையில் பைக்கையும் இன்னொரு கையில் பிரபாவையும் பிடித்திருந்தார் அவர்.

“பிரபாவை பிடி, பையனை இழு ! ”

“ என்னாச்சு? ”

“ பையன் பேண்ட்டு ஜிப்பை கீழே இறக்கி விட்டுட்டான்! ”

நான் தலையில் அடித்துக் கொண்டேன். எங்கள் பைக்கை உதைத்து ஒரு நிமிடம் உறும விட வேண்டும். அப்போதுதான் புறப்படும். இவர் பைக்கை பிடிக்கிற நேரம் அவன் கை வரிசை காட்டியிருக்கிறான்!

ஒரு வழியாக அனைவரும் பைக்கில் ஏறினோம்.

கிளம்ப ஒருநொடி இருக்கும் போது.......

“அம்மா..அம்மா.. ” மகள் சுரண்டினாள்.

“என்ன? ”

“ஆய் வருது !”

“அம்மா...எனக்கும்... ! ” பையனும் சேர்ந்து கொண்டான்.

கடவுளே !

“ஆய் வத்து! ஆய் வத்து! ஆய் வத்து! ஆய் வத்து! ஆய் வத்து! ஆய் வத்து! ஆய் வத்து!”

“ஐயோ! ”

பத்து நிமிடத்துக்கு மேல் ஓடியது. குழந்தைகளை வெளியே தள்ளினேன். இன்னொரு பாத்ரூமில் புகுந்து கொண்டன. குழந்தைகள் வருவார்களென்று அவரும், போய் விட்டார்கள் என்று நானும்....!

“குழந்தைங்க எங்க?” இருவரும் சேர்ந்து கேட்டோம்.

பாத்ரூமில் கதம்ப சப்தம்...

“விந்திய மாசல யமுகா யங்கா.. ! அதான்! சோ சக்கம்! ” தேசிய கீதத்துக்கு டப்பாங்குத்து ஆடிக் கொண்டும், தண்ணீர் வெளியேறப் பதித்திருக்கும் கையகல நீலநிற பிளாஸ்டிக் சல்லடைக்கு சல்யூட் அடித்துக் கொண்டும் ஒன்றன் மேல் ஒன்று தண்ணீர் இறைத்துக் கொண்டும் விளையாட, நான் சிரித்துக் கொண்டே அழுது விடும் நிலைக்குப் போனேன்!

திரும்ப பிடித்திழுத்து உடை மாற்றி....

வழியில் ஒழுங்காக பூட்டு போட்டேனா? சந்தேகம்! பால் எடுத்து வைத்தேனா? ஞாபகமில்லை. பாதி வழியில் அண்டை வீட்டாரிடமிருந்து கணவருக்கு ஃபோன் வந்தது. “மோட்டார் போட்டு ஸ்விட்ச் ஆஃப் பண்ணலையா? தண்ணி ரொம்பி வழியுது? ”

ஸ்டுடியோவில் போட்டோகிராபர் கேட்டார், “நல்லா சிரிங்களேன்? ஏன் புருசனும் பெண்டாட்டியும் அழுது வடியறீங்க? ”

??????????????????

எழுதியவர் : அருணை ஜெயசீலி (21-Feb-15, 6:51 pm)
பார்வை : 935

மேலே