மனசின் பக்கம் மணம் வீசும் மனசு

அபுதாபியில் அபூர்வராகத்தில் திரு.டெல்லிகணேஷ் அவர்களின் உரையை தொகுப்பாய் எழுதியிருந்தேன். அதைப் படித்த திரு.டெல்லிகணேஷ் அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில்... "உமது பதிவு ரொம்பவும் பிரமாதம். தெளிவாக, விரிவாக, விபரமாக இருக்கிறது. ரொம்பவும் நன்றி." என்று எழுதியிருந்தார். எனது பதிவை வாசித்து வாழ்த்தியமைக்கு அவருக்கு எனது நன்றி.
****
வலைச்சரத்தில் மீண்டும் ஒருமுறை அறிமுகம்... இந்த முறை எனது அன்புச் சகோதரி ஸஷிகா கிச்சன் திருமதி. மேனகா சத்யா அவர்கள் அறிமுகம் செய்துள்ளார். அதில் அவர் தொடர்கதை எழுதுவதில் வல்லவர் என்று சொல்லி எனது முதல் கதைக்கான இணைப்பைக் கொடுத்துள்ளார். ஆத்தாடி வல்லவனெல்லாம் இல்லையம்மா... சும்மா கிறுக்கியதுதான் அந்தக்கதை... நல்ல பதிவர்களையும் என்னையும் அறிமுகம் செய்த சகோதரிக்கு எனது நன்றி.
****
தமிழ்மண முன்னணி பதிவர்கள் வரிசையில் கடந்த ஆறு மாத காலமாக 10,11,12-க்குள் மாறி மாறி பயணம் செய்த எனது தளத்துக்கு முதல் முறையாக ஒற்றைப்படையில் (9வது) இடம் கிடைத்திருக்கிறது. வாராவாரம் ஞாயிறன்று பதியப்படும் அந்த வாரத்துக்கான முதல் இருபது பேர் பட்டியலில் சில வாரங்கள் 5, 8-ம் இடங்கள் கிடைத்திருக்கிறது. இது வலையில் நமது செயல்பாட்டை வைத்தே கணிக்கப்படுகிறது என்பதால் தொடர்ந்து கிடைப்பதில்லை. இருப்பினும் பகவான்ஜி, நம்மள்கி போல முதல் இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும் முதல் பத்துக்குள் இருப்பது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இதன் மூலம் என்னோட எழுத்தையும் நிறையப் பேர் வாசிக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?
****

சென்ற பகிர்வு மனசில் எனது 777 வது பகிர்வாகும். மற்ற வலைப்பூக்களில் தொடர்ந்து எழுதாவிட்டாலும் மொத்தமாகக் கணக்கில் எடுக்கும் போது (778+110+65+20) = 973 பதிவுகள்... கல்லூரியில் படிக்கும் போது ஐயாவின் தூண்டுதலால் சும்மா கிறுக்கி அவர் முயற்சியால் தாமரையில் முதல் கவிதை வெளியாகி, பின்னர் கதைபூமியில் கதைகள், கவிதைகள் என எழுதி பாக்யா, சுபமங்களா, மாலைமலர், தினமணி, தினத்தந்தி என ஒண்றிரண்டாய் கிறுக்கியவன் இங்கு வந்தபின் பத்திரிக்கையில் தொடர முடியாவிட்டாலும் நண்பனின் உதவியால் வலைப்பூ ஆரம்பித்து அதில் கிறுக்கி... பின்னூட்டம் வந்திருக்கிறதா எனப் பார்த்து... பார்த்து.... இன்று 1000 பதிவுகளை நெருங்கியிருக்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமாகத் தெரிகிறது. இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது. மீள்பதிவு, படித்ததில் பிடித்தது என கொஞ்சப் பதிவுகளைக் கழித்துப் பார்த்தாலும் 1000-த்தை எட்டிப்பிடிக்க காத்திருக்கின்றன எனது கற்பனையில் உதித்த பதிவுகள்... இவையெல்லாம் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் என் அன்பு வலை உறவுகளால் மட்டுமே சாத்தியமானது என்பதை எந்நாளும் மறக்கமாட்டேன். அனைவருக்கும் நன்றி.
****
சென்ற வார பாக்யா மக்கள் மனசு பகுதியிலும் எனது கருத்து வெளியாகியிருந்தது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் எனது எழுத்து அச்சேறுவது என்பது தினபூமி-கதைபூமியில் படத்துக்கு எழுதும் கவிதைக்குப் பின்னர் இப்போதுதான் நடந்திருக்கிறது. தினபூமி - கதைபூமியில் படத்துக்கு கவிதை எழுதுவதில் தொடர்ந்து ஆதிக்கம் செய்த சென்னிமலை சி.பி.செந்தில் குமார் அண்ணன் உள்பட சிலரில் நானும் இருந்திருக்கிறேன். அப்போது வியாழக்கிழமை கதைபூமியில் எனது எழுத்து வரும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அந்தச் சந்தோஷம் திரு.பூங்கதிர் அவர்கள் மக்கள் மனசு பக்கத்தை முகநூலில் பகிர்ந்ததைப் பார்த்தபோது கிடைத்தது, நண்பருக்கு நன்றி.
****

காதலர் தினத்தை ஒட்டி வெளியிட்ட அனுராக் சிறுகதைக்கு சிறப்பான பாராட்டுக்கள் கிடைத்ததில் சந்தோஷம்... ஆனால் ஏன் அனுவைக் கொன்றாய் என்று எல்லோருமே கேட்டார்கள். அனுவின் காதல் உண்மை என்றாலும் ஹேமா...? அவனுக்காகவே அவனையே நினைத்து வாழ்ந்தவள் அல்லவா... அவளின் காதலை உடைக்க மனமில்லை என்பதே உண்மை. மேலும் அனுவைப் பிடிக்காத ஹேமா, மகளுக்கு அனு என்று பெயரிட்டிருப்பதிலும் தன் வீட்டு ஹாலில் அனுவின் போட்டோ மாலைக்குள் சிரிப்பதற்கு அனுமதித்திருப்பதிலும் அனுவின் காதல் எவ்வளவு உயர்வானது என்பதை காட்டிவிடுகிறதே. மேலும் அனு எங்கோ இருக்கிறாள் என்று முடித்திருந்தால் எப்பவும் எழுதும் காதல் கதை போலாகிவிடும் என்ற உணர்வே அப்படி எழுதிய முடிவை இப்படி மாற்ற வைத்தது. இந்தக் கதையைப் படித்த குடந்தையூர் சரவணன் அண்ணன் இதை இன்னும் விரித்து திரைக்கதை போல் எழுதுங்கள் என்று சொன்னார். என்னால் முடியாது என்று சொன்னதும் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்றார். அப்படிச் சொன்ன அண்ணனுக்கு நன்றி.

****
அலைனில் வேலையை முடிந்துவிட்டோம். இப்போ இந்த மாதம் முடிய வேண்டும் என்பதற்காக அலுவலகம் சென்று எட்டு மணி நேரம் சும்மா இருந்து வருகிறோம். ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருக்கிறார் என்று திட்டுபவர்களை எங்கே நீ ஒரு மணி நேரம் சும்மாயிருந்து காமி என்று உட்கார வைப்பார். அப்படி ஒரு நிலைதான் இப்போ... சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்.... முடியலை... அதனால அழகியை பென்டிரைவில் ஏற்றிக் கொண்டு போய் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த வாரத்தில் மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். மூன்றும் என் மனசுக்குப் பிடித்த கதைகளாக அமைந்ததில் திருப்தி. அடுத்த மாதம் மீண்டும் அபுதாபி சென்று விடுவோம் என்று நினைக்கிறேன். அங்கே பொயிட்டா வேலை அதிகம் இருக்கும். சும்மா இருக்கதுக்கு வேலை இருப்பது சுகம்தான்.

****
சுற்றுலான்னு ஒரு படம் பார்த்தேன். ஆரம்பத்தில் நாடகம் போல் நகர்ந்தாலும் இடைவேளையின் போது கொஞ்சம் திரில்லாக நகர நல்லாயிருக்குமோங்கிற நப்பாசையில் பார்த்தா கேம் ஆப் டெத்துன்னு சொல்லிக்கிட்டு கிட்டிப்புல் விளையாண்டுட்டானுங்க.... ஸ்... அப்பா... கிளைமேக்ஸ்ல அம்மா சென்டிமெண்ட் வச்சி நம்மளை டெத் ஆக்கிடுறானுங்க... எப்படித்தான் இப்படியெல்லாம் தோணுதோ தெரியலை.

****
அனேகமா தமிழ் சினிமாவில் நாயகியைப் மையப்படுத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் படம் அனேகனாத்தான் இருக்கும். ஆரம்பத்தில் அமைரா சாதாரணமாகத் தோன்றினாலும் கதையோடு பயணிக்கும் போது அருமையாக நடித்திருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. அதிலும் ஐயராத்துப் பெண்.... ம்.... அருமை. தனுஷ் சொல்லவே வேண்டாம். மனுசனின் நடிப்புக்கு தீனி போடும் படம். அடிச்சு ஆடியிருக்கார்... காளி கதாபாத்திரத்தில் டாங்கமாரி...ஊதாரியின்னு பட்டையைக் கிளப்பியிருக்காரு... இது குறித்து மற்றொரு பகிர்வில் பேசலாம்.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே,குமார்.

எழுதியவர் : சே.குமார் (21-Feb-15, 8:24 pm)
பார்வை : 154

சிறந்த கட்டுரைகள்

மேலே