ஆடை உதறிய உடல்கள் - இராஜ்குமார்

ஆடை உதறிய உடல்கள்
~~~~~~~~~~~~~~~~~~~

விழிப் பிடுங்கும் திரைக்கு
உணர்வுகளை விற்று

உறக்கம் தொலைத்த
உடலோடு உலவும் என்னுள் ..

தண்டவாளம் கடக்கையில்
மெலனின் உயிர்த்தது

அதிகாலை அனைத்தும்
அந்திமாலையானது ...
அலுவலக நிர்பந்தங்களில் ...

வாடகை வீட்டில் ...
சுயமாய் சமைக்கையில்
அன்பின் அதிர்வுகள்
அழுத்த கலனின் ஆழத்தில் ...

கதவைத் தட்டிய கைகள்
கைக்குழந்தைத் தாங்கலில்
"அண்ணா" எனும் உச்சரிப்போடு ...
எனை விட வயதில் முதியவர் ...

அவரின் ..
வார்த்தைகளின் கனம்
தேவைகளின் ரணமாய் . .

எனதறையில்
உறங்கிய உடைகள்
அவசியத்தின் அடையாளத்தை
அறிமுகப்படுத்தியது ...
அவரிடம் அளிக்கையில் ...

மறுசுழற்சியின் மகத்துவம் ...
சேவையின் ஆழத்தில்
செதில் செதிலாய் சிதைந்தது
கைக்குழந்தையின் கடைசி சிரிப்பில் ..

கிழிந்தப் பைக்குள்ளிருந்து
விழப்போகும் பழைய உடையை
உள்ளங்கை வைத்து பிடித்த
கைக்குழந்தையின் கவனிப்பில்

உலகின் உயர்தரமெல்லாம் ...
உயிர் உதிர்த்து உறைந்தது ...

விழித்தும் உணராமல்
விளம்பர விரல்கள்
வீதிகளில் வரைகிறது

உள்ளாடையின்
உச்ச விலையை
கலவி காட்சியோடு ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (25-Feb-15, 12:50 pm)
பார்வை : 324

மேலே