மனிதவுரிமை போராளிகள்!
உரிமைக்கான ஆர்ப்பாட்டத்தை
ஆயுத போராட்டமாகவும்
ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டவர்களை
தீவிரவாதிகளாக சித்தரிக்கவும்
காவல்துறையினரால் முடியும்!
தேவைப்படுமெனில் - பொய்
வழக்குகளை ஜோடித்து
தேவைக்கு ஏற்றார்போல்
வழக்குகளின் எண்ணிக்கையை
பெருகசெய்யவும் முடியும்!
தீவிரவாதத்திற்கெதிராய்
தேசியபாதுக்காப்பு சட்டத்தின்கீழ்
விசாரணையின்றி கைதுசெய்து
சித்ரவதை செய்து
வருட கணக்கில்
சிறையிலடைக்கவும் முடியும்!
நீதிக்காக
நியாத்திற்காக - மனித
நேயத்திற்காக
போராடியவர்களை
தேசதுரோக குற்றவாளியாய்
அறிவிக்கவும் முடியும்!
நாட்டுநலன் பெயரில்
என்ன வேண்டுமானாலும்
எப்படியும் செய்யலாம்!
சட்டம் உங்களுக்கு
தூணாக நிற்கும் - ஏனெனில்
சட்டப்படியே எல்லாம்!
ஆம் - நீங்கள்
சட்டத்தின் பாதுகாவலர்கள்!
விசாரணையின்பேரில்
காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்து
கொடூரமாகன உள்காயத்துடன்
தாக்கி கொள்ளலாம்!
நீதிமன்றம் இதற்கு
ஐந்து நாளோ பத்து நாளோ
அனுமதியளிக்கும்!
தேவைப்படுமெனெல்
என்கவுண்டர் பெயரில்
சுட்டுத்தள்ளவும் முடியும்!
சட்டம்
அதற்கு ஏற்றார்போல்
வளைந்து கொடுக்கும்!
நீங்கள்
சிறந்த காவலர்கள் என
அரசியல் தலைவர்களால்
பட்டமும் கேடயமும் சூட்டபட்டு
பெருமைபடுத்தபடுவீர்கள்!
பதவி உயர்வு பெறுவீர்கள்!
இவற்றிற்காக
ஆளும் அரசியல் கட்சிக்கு
ஆதரவாக உங்களை
அடையாளப்படுத்திக் கொண்டு
மனசாட்சியை
குழிதோண்டி புதைத்து
செயல்பட்டாலே போதுமானது!
இத்தனைக்கு பிறகும்
மனிதவுரிமை போராளிகள்
முற்றிலும் மடிந்துபோவதில்லை!
புதிதுபுதிதாக முளைத்து
அரசின் தவறுகளுக்கெதிராக
ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டே
களத்தில் இருப்பார்கள்!
நீதிக்காக ...
நியாயத்திற்காக ...
மனிதவுரிமைக்காக ...