கரையாத நினைவுகள்

கரையாத நினைவுகள்!

கல்லூரி நினைவுகள் என்றும்
கரையாத கனவுகள்!

சிறு கதையான கனவுகளின்
தொடர் கதைகள்!

பரிச்சயமாகும்
பரிச்சயமில்லா முகங்கள்!
கலகலவென கைகோர்த்து
கதை கதைக்கும் நண்பர்கள்!

வகுப்பறைச் சுவர்களும்
மேளம் தட்டிய மேசைகளும்
மௌனமாய் சொல்லும் எமது
மலரும் நினைவுகளை!

முன்னேறும் முயற்சியில்
முதலிருக்கை பிடிக்கும்
முந்திரிக் கொட்டைகளும்
பின்னே பார்க்கலாம் என்ற
நினைப்பில் பின்னிருக்கையில்
பிண்ணிப் பிணைந்திருக்கும்
அதிமேதாவிகளும்
ஒட்டி உறவாடிய நிமிடங்கள்
நடமாடுகின்றன எம் கண்முன்னே!

பரிட்சை பயத்தில்
பசியை மறந்து
பச்சோந்தி ஆன நிமிடங்கள்!
பெற்றோரையும் மறந்து
பகற்கனவு கண்ட பொழுதுகள்
மெல்லிசை கலந்த உணர்வுகளுடன்
விரிகின்றன எம் மனத்திரையில்!

பார்க்காமல் பார்த்த பார்வைகள்
பகிரத்துடித்த நிகழ்வுகள்
பண்புப் பாராட்டிய தோழர்கள்
பாசம் காட்டிய தோழிகள்
பாடம் புகட்டிய தெய்வங்கள்
அனைத்தும் அழியாக் கோலங்களாய்
அலைபாய்கிறது எமது நெஞ்சில்!

நடனமாடிய கால்கள்
நகைத்துப் பேசிய தருணங்கள்
உறக்கத்தில் உலறிய ஆங்கிலம்
அவளுக்கும் அவனுக்கும்
அஞ்சி அஞ்சி பேசிய
தங்கிலீசு நிமிடங்கள்
தவழ்ந்து செல்கிறது எம்
நினைவுப் பரணில்!

படுக்கையறைகளைக் கேட்டால்
பக்கம் பக்கமாய் சொல்லும் எமது
பிறந்த நாள் கொண்டாட்டங்களை!

கல்லூரி முதல்
விடுதி வரை நாம்
கலை கட்டிய
கலை நிகழ்ச்சிகளை கணக்கிட்டால்
கண்ணீர் சிந்துகிறது மனது

நம்மை அறியாது நம்மை நாமே
மெச்சிக் கொண்ட மேடை நடிப்புகள்
நினைவு நாடாக்களாய்
ஊர்ந்து செல்கிறது நெஞ்சில்!

வாடுகையில் வளர்பிறையாகவும்
வருந்துகையில் தேய்பிறையாகவும்
வளர்ச்சியில் வாழ்த்துக்களையும்
வீழ்ச்சியில் விழிநீரையும்
சிந்திய உறவுகள் இவை!

சண்டை போட்டாலும்
சந்தோஷ நிமிடங்களையே
நெஞ்சில் வைத்து பூஐத்த
உள்ளங்கள் இவை!

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
இங்கே இணைந்து
ஓன்றாய் கலந்து
அன்பாய் இருந்து
ஆட்டம் பல கண்டோம்
ஆயுளின் ஒரு பகுதி முடிந்து
மறுபாதிக்குச் செல்கின்றோம்!

உண்மையில் நாங்கள்
பாக்கியவான்கள் ஒவ்வொரு
வினாடியையும் நண்பனோடு
நட்பாட வரம் பெற்றவர்கள் - அந்த
நட்பாடல்தான் எம்மையின்று
புன்னகைக்கும் பூகம்பத்திற்கும்
நடுவில் நிறுத்தி புன்னகைப்
பூத்துக் கொண்டிருக்கிறது!

புரியாத பிரியம்
பிரியும் போது புரியும் என்பார்கள்
அப்பிரியத்தின் புரிதலை
புன்னகையோடு எதிர்கொள்ள முயன்றும்
முடியாமல் நிற்கின்றோம்!

இன்னும் எத்தனையோ மலரும்
நினைவுகளோடு
ஒரு கூட்டுக் குருவிகள் நாம்
வாழ்வின் அடுத்த தேடல்களை
தேடி பறக்கப் போகிறோம்!

வழிகளில் சிறகுகள் வலித்தால்
கலங்கிட மாட்டோம்
தோள் கொடுக்கத்
தோழனுண்டு என்பதை
மறந்திட மாட்டோம்!

எழுதியவர் : குப்பன் .கோ (9-Mar-15, 7:35 pm)
பார்வை : 174

மேலே