நீயும் அக்காற்றும்

உன்னை நினைக்கும் நேரங்களின்
இசையும் கவிதையும்,
அந்தக் கணங்களில் பெருகும் அன்பும்,
என் மனதின் சுவர்களில் படரும் வலியும்,
எனக்கும் என் அறையில் நிறைந்திருக்கும்
காற்றுக்குமே தெரியும்.

என்றாவதோர் நாள்
அந்தக் காற்றை நீயோ,
அக்காற்று உன்னையோ
சந்திக்க நேர்ந்தால்
அதனிடம் எதுவும் கேட்டு விடாதே.

ஒருவேளை நீ கேட்டு விட்டால்
நமக்குள்ளான இடைவெளியின் நீளத்தை,
நம் அன்பின் நரம்புகளில் வழியும்
இசையின் துயரத்தை,
உன் காதலின்
வெம்மையால் தகிக்கும்
என் ஆன்மாவின் சிறகடிப்பை
நான் உன்னை நினைக்கும்
நேரங்களின் கவிதையை
அக்காற்று கூறக் கேட்டால்..

இதயத்தின் நாண்களில்
துயரம் ஏற வெடித்து விடுவீர்கள்
நீயும் அக்காற்றும்.

எழுதியவர் : நிக்கோலாஸ் பேட்ரிக் (10-Mar-15, 7:36 pm)
பார்வை : 71

மேலே