வாழ்த்துங்கள்… வாழ்த்தப்படுவீர்கள்
வாழ்த்துங்கள்…
வாழ்த்தப்படுவீர்கள்
வீழுகிறபொழுது
கைகொட்டிச்
சிரிக்கிறவரிடையே
தூக்கிவிடுவதற்காய்
நீட்டுகிற
கைகள்தான்
தேவனின் கரங்கள்....
வாழ்த்துங்கள்…
வாழ்த்தப்படுவீர்கள்
எழுகிறபோதெல்லாம்
தலையில்
குட்டுகிறவர்களைக்
காட்டிலும்
தோளை
தட்டிக்கொடுப்பவர்கள்தான்
கடவுளின் காதலர்கள்...
வாழ்த்துங்கள்…
வாழ்த்தப்படுவீர்கள்
கொட்டிக்கிடப்பது
பணமாய் இருப்பினும்
குப்பைதான்
உதவாதவரை.....
தட்டில் இட்டது
கூழாய் இருந்தாலும்
அமிர்தம்தான்
உழைப்பில்வர....
வாழ்த்துங்கள்…
வாழ்த்தப்படுவீர்கள்
அம்மாவின்
கண்மையை
கைகளில்
அப்பிக்கொண்டு
சுவர்களில்
அச்சுப்பதிக்கிற
குழந்தைதான்...
நீங்கள்
வாழ்த்துகிறபொழுது
பிக்காசோவாகிறான்
வைகிறபொழுதோ...
பிசாசாய் ஆகிறான்
வாழ்த்துங்கள்…
வாழ்த்தப்படுவீர்கள்
மகனின்
வராத மதிப்பெண்களுக்காக
வார்த்தைகளை இறைப்பதைவிட..
தேர்வில்
வாங்கவேண்டிய
மதிப்பெண்களுக்காக
அரவணைப்பது
அர்த்தமுள்ளது...
வாழ்த்துங்கள்…
வாழ்த்தப்படுவீர்கள்
எப்போதும்
உங்கள்
அலுவலக மேஜையை
சுத்தம் செய்து
செல்பவனைக்காட்டிலும்
இன்று
உங்கள்
பேனாக்கூண்டில்
ஒற்றை
ரோஜாவைச்
சொருகிப்போன
புதிய தொழிலாளியை
பாரட்டுங்கள்
ரோஜாமலரும் அவனுள்ளும்....
வாழ்த்துங்கள்…
வாழ்த்தப்படுவீர்கள்
காலமெல்லாம்
தோழமையோடு..
கரம்கோர்த்துக்கொண்டு
இரண்டாவது
அவதாரமாய்
வலம்வருபவள்
மனைவி..
நகைப்பூச்சாய்
திரிகிற பெண்களிடையே
அவளின்
எளிமையான..
நகப்பூச்சு மாற்றத்தைக்கூட
பாரட்டுங்களேன்
முத்தங்கள் கூடும்....
வாழ்த்துங்கள்…
வாழ்த்தப்படுவீர்கள்
சிறியதோ....
பெரியதோ...
சாதனைகளல்ல முக்கியம்
சாதிக்க நினைக்கிற
முயற்சிகள்தான் முக்கியம்
மாறுபடுகிற
எண்ணங்களே
மாற்றங்களை விதைக்கும்..
இனம்கண்டு
வாழ்த்துங்கள்…
வாழ்த்துங்கள்..
வாழ்த்தப்படுவீர்கள்
வாழ்ந்தபிறகும்....!!!!