ப்ரியமுடன் பிரிவு

தொப்புள் கொடியின் அறுவை
தொடக்கம் நம் பிரிவின் வருகை..!

சப்புக்கொட்டி குடிக்கும் தாய்ப்பாலில்,
சந்தித்தோம் இரண்டாம் பிரிவை..!

கட்டை விரலினை வாயில் வைத்து
எச்சில் கூட்டி விழுங்கின நேரம்..!

எத்துப் பள்ளாய் வளரும் சொல்லி
அத்தை மாமன் சத்தம் போட்டு,
எடுத்து விட்ட விரலில் உணர்ந்தேன்
பிரிவின் பயணம் இனி தொடரும் என்று..!

தம்பிப் பாப்பா பிறக்கையிலே
தாயின் முழுப் பாசத்தையும்..!

தத்தித் தத்தி நடக்கையிலே நாம்
தவழ்ந்த மண் வாசத்தையும்..!

பள்ளி செல்லும் வயதினிலே
படுத்துறங்கிய தாய் மடியினையும்
பிரிந்தோம்..

துள்ளி ஓடி ஆட்டம் போட்டு
கிள்ளி சின்ன சண்டை போட்ட
பள்ளி தோழர்களை பிரிந்தோம்
பட்டணத்தில் கல்லூரி சேர்ந்தோம்..!

தனிமை, சினிமா, இரயில் பயணம்,
கடற்கரை, கல்வி பயிலும் அறையில் அமர
கால் முளைத்த நாற்காலி மேசைகள் என
அனைத்திலும் முதல் அனுபவம் தந்த
கல்லூரி வாழ்க்கையில்..!

கட்டிப் பிடித்து உறங்கி எழுந்து,
கைகோர்த்து நடந்து சென்றோம்,
காதலர்களாக இல்லை..!

ஒரு தட்டில் சோறிட்டு
உனக்கு எனக்கு என ஊட்டி மகிழ்ந்தோம்
கணவன் மனைவியாக இல்லை..!

கர்ணனும் கவச குண்டலமுமாக
இருந்த நம் கல்லூரி நட்பு..!
தற்காலிக பிரிவுடன் தடம் வேறு சென்றது..!

நேற்று இன்று நாளை என்று
நித்தம் பிரிவினை ஏற்றுக் கொண்டு
காற்றடிக்கும் திசை நோக்கி
பறந்து போகிறோம் நூல் விடுத்த பட்டமாய்..!

காலம் கடந்தாலும், வானம் கிழிந்தாலும்,
பூமி உடைந்தாலும், பூவுலகை பிரிந்தாலும்,

நாம் பழகின நாட்களின் நினைவுகள் என்றும்,
நம் மனதை விட்டு பிரியாத வரம் வேண்டும்..!

எழுதியவர் : இந்திரன் (17-Mar-15, 9:12 pm)
Tanglish : pirivu
பார்வை : 324

மேலே