எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்

மார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் நாள்

என் பால்ய காலத்து
மரக்கிளை தோழியே..
நீ எங்கு இருக்கிறாய்??

இளம் சாம்பல் கலந்த
பழுப்பு நிற உயிரே..
நீ எங்கு இருக்கிறாய்??

வைக்கோலில் நெய்து
கிண்ண வடிவ கூடுகள்
கட்டும் சிறு குருவியே..
நீ எங்கு இருக்கிறாய்??

வெள்ளை கலந்த பச்சை
நிற முட்டையிடும்
மாலை சிட்டே..
நீ எங்கு இருக்கிறாய்??

சின்னஞ்சிறு சிட்டுக்குருவியே..
நீ எங்கு இருக்கிறாய்??

மனிதர்களிடம் உனக்கென்ன கோபம்??
ஏன் பேச மறுக்கிறாய்??

"ஆடம்பர வாழ்க்கைகாக
பிற உயிர்களை கொல்லும்
மனித அரக்கர்களிடம்
நான் பேசுவதில்லை.."

மனிதனிடம் அப்படி
என்ன குரைகள் கண்டீர்??

"குரைகள் ஏதுமில்லாமலா
எங்களினம் அழந்தது"

உங்களினம் அழிந்ததிற்கு
நாங்கள் எப்படி காரணமாவோம்
காரணங்களை
பட்டியலிடுங்கள் பார்ப்போம்..

1."வெளிக்காற்று நுழையாத
குளிரூட்டப்பட்ட வீடுகளில்
வாழும் உங்களுக்கு புரியுமா
நாங்கள் எங்கே கூடு
கட்டுவோமென்று"

2."கழிவு புகையால்
காற்றை மாசுபடுத்தும்
உங்களுக்கு தெரியுமா
அது பூச்சிகளை அழித்து
எங்களையும் பட்டினியில் அழிகிறதென்று"

3."காடுகளை அழித்து
பல்பொருள் அங்காடி கட்டும்
உங்களுக்கு புரியுமா
எங்களுக்கு தானியங்கள்
எந்த நெகிழி பையில் கிடைக்குமென்று"

4."வேதி பூச்சிக்கொல்லியை
தெளிக்கும் உங்களுக்கு தெரியுமா
உயிரியற் பல்வகைமை
என்றால் என்னவென்று"

5."தொழில்நுட்ப புரட்சியால்
தொலைபேசி கோபுரங்களை
அதிகப்படுத்தும்
உங்களுக்கு தெரியுமா
இதன் கதிர்வீச்சால்
எங்களுக்கு மலட்டு தன்னைமையும்
அதிகமாகிறதென்று"

இப்படி எதிர்வினைகள்
நடக்குமென்று தெரிந்திருந்தால்
முன்பே இதனை தடுத்திருப்போம்

"வார்த்தைகளை கொட்டுவதில்
மனிதர்கள் வள்ளல்கள்
என்பது எனக்கு தெரிந்த ஒன்றே"

கவலை வேண்டாம்
உங்களினத்தை காப்பாற்றுவோம்
எங்களால் முடிந்தவரை முயல்கிறோம்

"உங்கள் மொழி பேசும்
உங்கள் உறவுகள் ஈழத்தில்
கொத்துக் கொத்துகாக
செத்து மடியும் வரை
இதே வார்த்தைகள் தான்
ஒலித்தது உங்களிடம்
இப்போது எப்படி நம்புவது"

உங்களை காப்பாற்ற
எங்களால் முடியவே முடியாதா

"நிச்சயம் முடியாது
வேண்டுமானால் எங்களுடன் ஓர்
புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள்
உங்களின் அடுத்த தலைமுறைக்கு
நாங்கள் ஓர் அதிசயமாக கூட தெரியலாம்"

கடைசியாக நீங்கள்
சொல்ல விரும்புவது

"அழிவின் விளிம்பில்
இன்று நாங்கள்
நாளை _________???"

எழுதியவர் : கோபி சேகுவேரா (20-Mar-15, 4:03 am)
பார்வை : 147

மேலே