எங்கள் தமிழ்ஆசான் புலவர் குருநாதன்
பாடல் 1: எங்கள் தமிழ்ஆசான் புலவர் குருநாதன் என்று அளவடி வெண்பா எழுத முயற்சித்த பொழுது, இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் அமைந்து, ஈற்றடியில் மூன்று சீர்களில் முடிக்க முடியவில்லை. பெருகவே என்று ஏகாரத்தில் நான்காவது சீர் அமைந்து, 'ஓங்குபுகழ் பெருகவே' என்ற இடத்தில் மட்டுமே நிரை ஒன்றிய ஆசிரியத்தளை அமைந்தது.
நிலைமண்டில ஆசிரியப்பா
மேல்நிலைப் பள்ளியிலே சோழவந்தா(ன்) ஊரினிலே
ஆல்போல நாங்கள் தழைத்திடவே மால்போல்
நலன்கள் விதைத்த தமிழ்ஆசான் எங்கள்
புலவர் குருநாதன் ஓங்குபுகழ் பெருகவே! 1 *
பாடல் 2: மேலேயுள்ள பாடலையே, ஆசிரியத்தளை வருமாறு மாற்றங்கள் செய்த பொழுது, ஒரு இடத்தில் (புலவர் குருநாதன்) இயற்சீர் வெண்டளையும், ஒரு இடத்தில் (குருநாதன் ஓங்குபுகழ்) வெண்சீர் வெண்டளையும், மற்ற இடங்களில் ஆசிரியத்தளையும் வந்து 'நிலைமண்டில ஆசிரியப்பா'விற்கு பெரும்பாலும் ஒத்திருந்தது.
நிலைமண்டில ஆசிரியப்பா
மேல்நிலை வகுப்பில் சோழவந்தான் நகரில்
ஆல்போல் நாங்களும் தழைக்க மால்போல
நலன்களை விதைத்த எங்களின் தமிழ்ஆசான்
புலவர் குருநாதன் ஓங்குபுகழ் பெருகவே! 2 *
பாடல் 3: இரண்டாவது பாடலில் இருந்து ஈற்றயலடியில் எங்களின் என்ற சொல்லை நீக்கி, 'நேரிசை ஆசிரியப்பா'வாக ஆக்கினேன். 'விதைத்த தமிழ்ஆசான்' என்ற இடத்தில் இயற்சீர் வெண்டளை அமைந்தது.
நேரிசை ஆசிரியப்பா
மேல்நிலை வகுப்பில் சோழவந்தான் நகரில்
ஆல்போல் நாங்களும் தழைக்க மால்போல
நலன்களை விதைத்த தமிழ்ஆசான்
புலவர் குருநாதன் ஓங்குபுகழ் பெருகவே! 3 *
பாடல் 4: கீழேயுள்ளது போல மாற்றம் செய்து, 'இணைக்குறள் ஆசிரியப்பா'வாக அமைத்தேன்.
இணைக்குறள் ஆசிரியப்பா
மேல்நிலை வகுப்பில் சோழவந்தான் நகரில்
ஆல்போல் நாங்களும் தழைக்க
மால்போல நலன்களை
விதைத்த எங்களின் தமிழ்ஆசான் பெருமைமிகு
புலவர் குருநாதன் ஓங்குபுகழ் பெருகவே! 4 * - வ.க.கன்னியப்பன்
பாடல் 5: கீழேயுள்ளது போல மாற்றம் செய்து, 'இணைக்குறள் ஆசிரியப்பா'வாக அமைத்தேன்.
இணைக்குறள் ஆசிரியப்பா
மேல்நிலை வகுப்பில் சோழவந்தான் நகரில்
ஆல்போல் நாங்களும் தழைக்க
மால்போல நலன்களை
விதைத்த எங்களின்
தமிழ்ஆசான் பெருமைமிகு
புலவர் குருநாதன் ஓங்குபுகழ் பெருகவே. 5 * - வ.க.கன்னியப்பன்
பாடல் 6, 7: கீழேயுள்ளபடி மாற்றம் செய்து 'அடிமறிமண்டில ஆசிரியப்பா'வாக ஆக்க முயற்சித்தேன். 'கலி விருத்தம்' என்று வருகிறது.
கலி விருத்தம்
மேல்நிலைப் பள்ளியிலே சோழவந்தா(ன்) ஊரினிலே
ஆல்போல நாங்கள் தழைத்திடவே மால்போலே
தமிழ்ஆசான் எங்கள் நலன்கள் விதைத்தே
புலவர் குருநாதன் ஓங்குபுகழ் பெருகவே! 6 *
தமிழ்ஆசான் எங்கள் நலன்கள் விதைத்தே
மேல்நிலைப் பள்ளியிலே சோழவந்தா(ன்) ஊரினிலே
ஆல்போல நாங்கள் தழைத்திடவே மால்போலே
புலவர் குருநாதன் ஓங்குபுகழ் பெருகவே! 7 *
பாடல் 8:
இரு விகற்ப நேரிசை வெண்பா
மேல்நிலைப் பள்ளியிலே சோழவந்தா(ன்) ஊரினிலே
ஆல்போல நாங்கள் தழைத்திடவே - மால்போல்
இலக்கணம் வித்திட்ட நற்றமிழ் ஆசான்
புலவர் குருநாதன் தான்! - 8 *
பாடல் 9: நான்கடிகளுமே நான்கு சீர்களுடனும், ஏகாரத்தில் முடிந்தும், பெரும்பாலும் ஆசிரியச் சீர்கள் அமைந்திருந்தும் 'அவலோகிடம்' தளத்தில் 'நிலைமண்டில ஆசிரியப்பா' என்றே வருகிறது. இது 'அடிமறிமண்டில ஆசிரியப்பா'வா அல்லது 'நிலைமண்டில ஆசிரியப்பா'வா என்று கருத்தளியுங்கள்.
மேல்நிலை வகுப்பில் சோழவந்தான் நகரிலே
ஆல்போல் நாங்களும் தழைக்க மால்போலே
தமிழ்ஆசான் எங்களின் நலன்களை விதைத்தே
புலவர் குருநாதன் புகழ்ஓங்கிப் பெருகவே! 9