இறக்க முடியா பெருஞ்சுமை

எந்நேரமும்
அற்றுவிழக்கூடிய
இற்றுப்போன
இந்த நூற்பாலத்தில்
ஆயுளை பணயம்
வைத்து -
ஒருவரையொருவர்
முண்டியடித்து
முன் தள்ளுமோட்டத்தில்
அனைவரும்
புறந்தள்ளமுடியா
பழைய சுமையொன்றை
தூக்கிக்கொண்டே
திரியவேண்டியிருக்கிறது !
இறக்கி வைத்தல்
அத்தனை சுலபமில்லை
என்கிறபோது
பின் மூட்டை பாரமழுத்த
குனிந்து கொண்டே
கூனாகிப் போகிற
பாண்டிய மனது
நிமிர்தலில் நிறைவடைவதில்லை !
மனதின் சிதைந்த
ஓட்டை , உடைசல்
கந்தலுட்பட
பெருக்கித்தள்ளமுடியா
பெரும்பாரம் இறக்கி
வேண்டா குப்பை விலக்கி
சேர்ந்துவிடுகிற
பெருங்குப்பைதூக்கி
வழிநெடுக ஊர்ந்தும்
ஊர் சென்று சேரமுடிவதில்லை !
பயணத்தில் ஆங்காங்கே
குப்பை கழிக்க கழிக்க
கண்முளிபிதுங்க
கருமங்கள் பின்சேர்ந்து
மூட்டை கனக்கிறது !
வரிசையாய் விரைந்தேகும்
சுமையூர்திகள்
ஒன்றன் பின் ஒன்றாய்
மாறி மாறியவை
பாரம் நசுக்கிப் பிதுங்கிய
பின் -
மெலிதாய் படிந்திருக்கும்
காலச்சுவடுகளில்
வாழ்வின் அடையாளங்களென
வாரிசுகள் மூட்டை சுமக்கும் .