என்னை விட்டு போகாதே பகுதி 5
இருள் சூழ தொடங்கியது. என்னவோ தன் வாழ்விலும் இருள் சூழ்வது போல் பதறியது அவனது இதயம். கைப்பேசியை எடுத்தான் அவளை தொடர்புகொள்ள. அவனது உள்ளம் அவனை தடுத்தது. ஒரு வித பிடிவாதம் அவனை ஆக்கிரமித்து விட்டிருந்தது.
இனியும் காத்திருப்பதில் பயனில்லை என்று சொன்னது அவன் மனம். மெல்ல எழுந்தான். அவன் அந்த இடத்தை விட்டு விலக எத்தனிக்கையில் அந்த நிகழ்வு நடந்தேறியது.
அந்த ஒலி அவனது செவிகளை வந்து அடைந்தது. எத்தனை நாளாய் இவனை பித்து பிடித்தது போல் அலைய வைத்த ஒலி அது. அவளின் காலோடு இருக்கும் பாக்கியம் பெற்ற கொலுசின் ஒலி தான் அது. அவளை நோக்கி அவனது மனம் பயணிக்க இந்த ஒலியும் ஒரு காரணம். அவனை நோக்கி வந்தன ஆண் ஒலிக்கு சொந்தமான உருவம்.
அருகில் நெருங்கிய அந்த ஒலியின் திசையில் இருந்து கேட்டது “கண்ணன்” என்று அவனை அழைக்கும் குரல். ஆம் , அவன் பல வருடங்களுக்கு முன் கேட்ட அதே குரல் தான் அது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான். அவனது விழிகள் அதிர்ச்சியிலும் ஏதோ இனம் புரியா இன்பத்திலும் உறைந்து போனது. அங்கு நின்று கொண்டிருந்தது அவன் தன் உயிருக்கும் மேலாய் நேசித்த தேவி .
நொடி பொழுதில் அவன் மனதில் தோன்றி மறைந்தன அவனது கடந்த கால நினைவுகள். தன் வாழ்வில் ஏற்பட்ட எத்தனையோ மாற்றங்களில் பெரிதாய் அவன் கருதுவது கவியரசியின் வருகையை தான். அப்படி பட்டவளிடம் அவன் மறைத்த ஒற்றை நிகழ்வு தேவி மீதான அவனது காதல்.
காரணம் அவனை அவள் காதலிக்கவில்லை. இவன் மட்டுமே அவள் மீது காதல் கொண்டு இருந்தான். அவளிடம் இவன் தன் காதலை சொல்லிய போது அவள் அதனை ஏற்கவில்லை. மாறாய் அவனை தனக்கு ஒரு தோழனாக இருக்க சொன்னாள். அவன் முடியாது என்றுரைத்த போதும் அவனை ஒரு நண்பனாக மாற்ற முயற்சித்தாள்.
நிலத்தின் மீது உள்ள காதலை நிழல் என்றும் மாற்றி கொள்வதில்லையே. அவனும் அப்படி தான்,மாறாத அவனது எண்ணம், மாற்றிக்கொள்ள விரும்பாத அவனது குணம் இவற்றில் எது அவளுக்கு பிடிக்காமல் போனதோ? அவனிடம் பேசுவதை தவிர்க்க தொடங்கினாள்.அவனுக்கு அது பெரும் வலியை கொடுத்தது. இருந்த போதும் அது அவன் எதிர் பார்த்த ஒன்றே. அதனால் அவனது மனம் அதை ஏற்று கொண்டது. உண்மையை சொன்னால் ஊமையாக உள்ளுக்குள் அது அழுதது வெளியில் எவருக்கும் தெரியாதபடி.
நாளடைவில் அவள் அவனை விட்டு முழுவதுமாய் விலகி சென்ற பின் அவள் தன் வாழ்வில் மீண்டும் வர போவதில்லை என்றே அவன் எண்ணி இருந்தான். அவனது மனம் வலியில் தவித்து கொண்டிருந்த அந்த நேரத்தில் அவனை மகிழ்விக்க வந்த தேவதையாய் அவன் நினைத்தது கவியரசியை தான்.
இன்று தேவி மீண்டும் அவன் வாழ்வினுள் வந்திருப்பதற்கான காரணத்தை இயற்கை மட்டுமே அறியும். “எப்படி இருக்கிறாய்?” என்ற அவளின் குரல் அவனை மீண்டும் நிகழுலகத்திற்கு கொண்டு வந்தது.
“நான் நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?” என்றான் அவன் சற்றே குழம்பிய மனதுடன்.
குழப்பம் எப்படி இல்லாமல் போகும். நான்கு வருடத்திற்கு முன் இவனை விட்டு விலகி சென்றவள் இப்போது மீண்டும் வந்திருக்கிறாள், அதுவும் ஏதும் நடக்காதது போன்ற புன்சிரிப்புடன்.
“என்ன கண்ணன் என்னை மறந்து விட்டாய் என்றல்லவா எண்ணி இருந்தேன். நினைவில் இருக்கிறேனா? “ என்றாள் கிண்டல் கலந்த தோரணையில்.
எத்தனை அழகாக கேட்கிறாள் ..! காதல் என்ற இடத்தில் அவள் பெயரை ஆழ பதித்துவிட்ட என் மனது எப்படி மறக்கும் அவளை இந்த சிறிய இடைவெளியில்.
மௌனம் கலைத்து பேசினான் அவன், “இல்லை தேவி, உன்னை மறப்பது அவ்வளவு எளிதல்ல” அன்றே அவளிடம் சொல்லி இருக்கிறான் அவன். “இன்று மட்டுமல்ல என்றும் உன்னை காதலிப்பேன் நீ என்னை விட்டு எத்தனை தொலைவு சென்றாலும்”என்று. அது வெறும் பேச்சாய் அவன் சொன்னது அல்லவே.
“இத்தனை வருடங்களில் உன் வாழ்வில் எந்த பெண்ணும் வந்திடவில்லையா?” என்றாள் அவள் தன் புருவங்களை உயர்த்தியபடி.
வர வேண்டும் என்பது அவளது எண்ணமா? புரியாமல் தவித்தான் அவன். பெண்களின் விழிகள் செய்யும் செய்கைகள் பல சமயங்களில் அவர்களின் கேள்விகளை விடவும் புதிரான ஒன்றாகி விடுகின்றது.