உள்ளம் சேர உவப்பாய்த் தாயே
இலக்கணம் வழுவா இன்பத் துப்பால்
இலக்கியம் பயிலா இல்லத் தின்அரசி
அகம்புறம் அறியா அன்பின் பாலாய்
அகத்தில் முகத்தில் அலர்ந்திடச் செய்யும்
நற்றிணை இயம்பிடு நல்லாள் நீயென
பற்றுடன் பேசிடும் பந்தம் தன்னைக்
குறுந்தொகைக் குறையாக் குழந்தை யானும்
சிறியவன் என்றும் சீலத்தில் காணின்.
எண்ணிலா மக்கள் எடுத்திடும் பிறப்பில்
கண்ணின் மணியாய்க் காத்திடும் அன்னை
உன்னை யன்றி உலகில் எவரும்
என்னைக் காக்க எடுப்பார் பிறப்போ ?
பாரதிக் காணும் புதுமைப் பெண்ணே !
யாரறி வார்உன் யாப்பின் சிறப்பை .
மரபின் கவிதை மங்கா இன்பம் .
விரைந்து வந்து வியக்கச் செய்யும்
பெண்ணினம் நீயும் பேசா ஊமை .
மண்ணில் இன்னிலை மாறிடக் கூடுமோ ?
ஐந்திணை மயங்கும் ஐயம் இல்லா
எந்தனைப் போற்றும் ஏட்டில் உனையும்
வண்ணமாய் வரையவே வந்தே அமர்ந்தேன் .
எண்ணமாய் நெஞ்சினில் என்னில் அமர்ந்தாய் .
அமர்ந்திடும் வேளையில் அருகில் நீயும்
கமழ்ந்திடும் உனையேக் காக்கப் பிறந்தேன்
என்று நீயும் என்னிடம் சொல்ல
என்றும் அந்த எந்தாய் மொழியே
மந்திரம் தானே ; மறுப்பும் இல்லை .
எந்திரச் சக்தியாய் என்னை உந்த
யாது மாகி நின்ற உனையும்
ஏதும் அறியா ஏங்கித் தவிக்கும்
பிள்ளை என்னை நீயும்
உள்ளம் சேர உவப்பாய்த் தாயே !