ஈரமில்லா இதயங்களின் இனப்பெருக்கம்

அடிமை தேசத்தின் அகதிகளை
பணத்தின் பகல் கோலங்கள்
பல கோணங்களாக பிரிக்கிறது...

தீப்பெட்டி தொழிற்சாலைகளால்
திருடப்பட்ட இரவுகள்
ஒளி இழந்தே காணப்பட்டது
ஏழைகளின் எதிர் காலத்தைப் போல...

யாரும் வாசிக்காத நேரத்தில்
ஏழை சிறுவனின் விதியை
வாசித்துக் கொண்டிருந்தது
பள்ளிக்கு செல்லாத புது புத்தகம்...

ஈரமில்லா இதயங்கள்
இறைவனை வேண்டிக் கொண்டே இருக்கிறது
இனப்பெருக்கத்தில் இடையூறு
வரக்கூடாது என்பதற்காக...

சமத்துவபுரங்களை கட்டிவிட்டு
சாதிவாரியாக வீடுகள் ஒதுக்கப்பட்டது...

சில வேளைகளில்
சில மனிதர்களுக்கு
பசியே உணவாகி விடுகிறது...

தேடலில்தான் வாழ்க்கை
ஆனால் இங்கு மனிதரிடம்
தொலைந்து போயிருந்தது வாழ்க்கை...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
எவன் சிரிப்பில்
எமனைக் காண்பீர்கள்?

எழுதியவர் : ஜின்னா (3-Apr-15, 11:26 am)
பார்வை : 326

மேலே